53. பா மாலிகை ( கதம்பம்) மனம் வரவில்லை

 

 

book

*
மனம் வரவில்லை

*

அம்மா அழைத்தும் கேட்காது
இம்மியளவும் அசையாது மழையில்
செம்மையாய் நனைந்தோம். குடையுள்
செல்லவும் மனம் வரவில்லை

*

அதி மேதாவியெனப் பேசும்
மதியாதோர் முற்றம் மிதித்து
அதிகார மனதாளருடன் பிணைந்து
சிதிலமாகிட மனம் வரவில்லை.

*

காலத்தை வீண் கதைகளில்
காலிட விடாது கலைகளின்
காவேரியில் நீந்தி காவியமாக்கலாம் – வீண்
காலக்கழிவுக்கு மனம் வரவில்லை

*

எழுத்துப் பிழைகளற்ற தமிழ்
முழுமையாக வாசித்தல் இன்பம்.
வழுவுடை எழுத்தைத் திருத்தாது
நழுவிட மனம் வரவில்லை.

*

உருகிடும் உன் பாசம் 
மருவிடும் பார்வை மலர்கள்
அருவியாயென்னை அணைப்பதை மறக்க
ஒருமுறையும் மனம் வரவில்லை.

*

அன்பைக் கொடுத்து கனிந்த 
அன்பை வாங்க, அளவளாவி
இன்புற, இணைந்து உலாவிட
என்றும் மனம் விரும்புகிறது.

*

27-3-2018  வேதா. இலங்காதிலகம்.டென்மார்க்.

*

time

 

Advertisements

52. பா மாலிகை ( கதம்பம்) உலகத் தமிழ் மின்னூலில் (வாழ்வின் பொருள் என்ன… )

 

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின்.
உலகத் தமிழ் மின்னூலில் எனது கவிதை ஒன்று 
வாழ்வின் பொருள் என்ன – தலைப்பில். 
வெளிவந்துள்ளது.
மகிழ்வுடன் பல நன்றி.

*

ulaka-thamil-1

*

ulaga-thamil-2

*

 

வாழ்வின் பொருள் என்ன… 

*
அன்னை தந்தையின் உறவால் நாமறியாமலொரு
சின்னக் கருவாகியிருட்டுலகில் முதிர்ந்து பிறந்தோம்.
என்ன பொருளிவ் வாழ்விற்கென்றால் ஒரு
உன்னதக் கேள்விககுப் பதில் உண்டோ!
வாழ்வு ஒரு முறையாம் தெளிவாயுணர்வோம்.
வாழ்வு பல புள்ளிகளுடைய அமைப்பாம்.
தாழ்ந்திடாது அவற்றை ஒன்றாய் இணைத்தல்
வீழ்ந்திடாது வாழ்ந்து உயர்தல் பெருமை.
அருத்தமாக வாழ்ந்திட அதற்கென சீரான
ஒரு குறிக்கோளோடு பயணித்தல் மேலும்
ஒரு இலக்கு வைத்து முன்னேறுதல்  எம்
அற்பதப் படைப்பின் மேன்மை நோக்கமாகும்
நம்பிக்கை என்னும் கொழு கொம்போடு
எம்பியெழுந்து முன்னேறினால் உலகினொரு பகுதியாக
செம்மையாய் உணரப்படுவோம். புறவுலகின் அன்பிணையும்.
வெம்மையாமெதிர்ப்பின் தொல்லை தாங்கும் வலுவிணையும்.
கோபம், ஏமாற்றம் தோன்றினுமுடன் மறையும்
தீபமான அறிவுத் தெளிதல்  புரிதலான சங்கமமாகும்.
பாபமான ஆசையால் துன்பம் அடைகிறோம்.
சாபமற்ற அன்பு, கருணையுண்மை, நேர்மையுயர்வாக்கும்.
கண்டு, கேட்டு, பெற்றடைதல் வாழ்வு.
உண்டு, தேடி, ஆராய்தல் வாழ்வு
தண்டெனும் ஒருமைப்பாடு பசையாக இணைக்கும் 
அன்பு வாழ்வின் மிகப்பெரும் பொருள்.
உழைப்பு சிகரமேற்றும் சோம்பல் பொருளழிக்கும்
அழைப்பில்லா வஞ்சனை, பொறாமை, சூது
தளிர்க்கின்ற பண்பை வாழ்வின் பொருளையழிக்கும்.
பிழைக்கின்ற அருளே வாழ்வின் பொருள்.
இறைபக்தியால் நல்லோரிணக்கம், மூத்தோர் வார்த்தைகளாம்;
கறையற்ற  ஊன்றுகோல்களால் நற்பொருள் உணர்வோம்.
நிறையற்றவுலகில் நிலையாமை வாழ்வு இது.
குறையான மனக்குளப்பமின்றி கேள்வியற்று மனமமைதியாவோம்.
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 20-2.2018
*
vallu

51. பா மாலிகை ( கதம்பம்) நிலையில்லா வாழ்வு.

 

po

*

 நிலையில்லா வாழ்வு.

*

மண் குடிசையானாலும் மகிழ்ச்சி ஒன்றே
மனிதனின் நிலையான செல்வம்.
ஒன்று முதல் ஒன்பது பத்துவரை
ஓடியோடி உழைத்து உயர்.
ஆறாத பசியுடன் அம்மாவிற்குக் காத்திருப்பு
ஆறுமா இரை அகப்படுமா.
பட்ட மரமானாலும் பயன் தரும் 
பாடை வரை அறி.
நிலையில்லா வாழ்வில் நிலைத்த முயற்சி
நிர்மூலமாக்காது மனிதனை என்றும்.
ஏழைக்குக் கைகொடுத்து ஏற்றுவது இருப்பதை 
ஏழாகப் பங்கிடும் குணம்.

*

– 20-6-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

*

muruga

50. பா மாலிகை ( கதம்பம்) கடந்து போகும் நேரங்கள்.

 

 

clock

கடந்து போகும் நேரங்கள்.

*

நடந்து முடிந்த பாடங்கள்
கடந்து போன நேரங்கள்.
உடந்தை எம் கவலையீனமே.
கிடந்து மனம் வருந்துமே.

*

கடந்த காலத்தில் ஊரில்
நடந்து வாழ்ந்த காலங்கள்
படர்ந்து பழகிய உறவுகள்
தொடர்ந்து வராதது பெருமேக்கமே.

*

தடம் மனதில் பதித்தவையினிக்
கேட்டாலும் வராதவை…..
கிடைத்த நேரத்தைப் பொன்னாக்குவோம்.

*

13-6-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

time

49. பா மாலிகை ( கதம்பம்) மொழி பெயர்ப்பு.

 

 

molipeya

*

மொழி  பெயர்ப்பு

*
மொழிபெயர்ப்பு மொழியாக்கம் ஒரு கலை
மொழி வளர்ச்சிக் கருவியாகவும் உலகிலே
தொடர்பாடலை இலகுபடுத்த வெகுவாய் உதவும்
தொலை உலகங்களை ஒன்றாக இணைத்தும்
தொடரும் சவால் நிறைந்த செயல்
*
பன்மொழிகள், கலை, இலக்கியம், பண்பாடு
படைப்பாக்க நுணுக்கம், சமூக அமைப்புகள்
படித்துணரும் வாய்ப்பு மொழிபெயர்ப்பின் அமைவு.
பிறர் கருத்து சிந்தனையைச் சுயமொழியில்
புரிந்திட உதவுமொரு இணைப்புப் பாலம்.
*
பிறமொழியறியாதவர் சொந்த மொழியில் அறியவும்
புதுக் கலைச்சொற்களறிவால் சொற் பஞ்சமழியவும்.
பலவிதமாய் மொழியைக் கையாளும் தாராளதன்மையுடன்
பாரம்பரிய நீண்டகால இலக்கியத்தொன்மை செம்மையறிவோம்
பாரிய உலக ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது.
*
பொழுது போக்கல்ல இலக்கியம்! பாரதியாரும்
பாடினார் அன்று, பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெறவேண்டும் என்று.
மொழிபெயர்ப்பு கடினமானதும், மாபெரும் சக்தியானதும்.
மனிதகுலத்தை வாழ்விக்க உதவுமொரு இயக்கமிது.
*
கிறிஸ்துவிற்கு முன்னர் இருநூற்று ஐம்பதில்
ஐரோப்பாவில் மொழி பெயர்ப்பு முதலுருவாக
கோமரின் ஒடிசி காப்பியம் இலத்தீனிலுதித்தது.
தமிழில் இந்தியாவில் விவிலியம் முதலாயுதித்தது.
தொடர்ந்து ரஷ்ய நூல்கள் வந்துதித்தன.
*
திருக்குறள் தொண்ணூறு மொழிகளில் மாற்றமானது.
கௌரவமான பண வருவாய்த் தொழிலிது.
கவனம், விடாமுயற்சி, மொழியறிவு பண்பாடுகளுதவுகிறது
கூகிளாலின்று அறுபத்துநான்கு மொழியாக்கம் முடியுமாதலால்
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு இலகுவாகிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-3-2018
*
akaram

48. பா மாலிகை ( கதம்பம்) தந்தமோ!..மெழுகோ!….

 

 

meluku

*

தந்தமோ!..மெழுகோ!….

*

சந்தனத்தில் குழைத்த பிஞ்சுப் பாதமன்றோ
தந்தத்தில் செய்ததோ இது இன்று!
முந்தி வரும் கொலுசோடு தாளம்
தந்தனாப் போடுகிறது மெழுகுப் பாதம்.

*

மெல்லப் பிடித்து மிருதுவாய் அணைத்து
செல்லமாய் வருடி ரசித்துப் பிணைத்து
அல்லது தூர இருந்து ரசித்து
தில்லானா போட வைக்கும் பாதம்.

*

பா ஆக்கம் பா வானதி    வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  11-5-2016

*

paatham-2

47..பா மாலிகை ( கதம்பம்) பயம்.

 

 

pajam

*

பயம்.

*

பயம் தவிர் உன்னை
செயம் தொடுவது உண்மை
ஐயம் கொள்ளும் மனதையும்
பயம் வேகமாய்ப் பற்றும்.
பயம் வதைக்கும் பேய்.
பயத்தோடு நாம் பிறக்கவில்லை

*

முதுமை நெருங்கப் பயம்
இறப்பு நெருங்கப் பயம்.
நோய் வரும் பயம்.
வறுமை தோல்விக்குப் பயம்.
அன்பை இழக்கப் பயம்.
கேலி செய்வாரோவெனும் பயம்.

*

பயமடை கெட்டது செய்ய.
பயத்தின் எதிரி கவலை.
பயம் மனதிலானால் எந்த
சயமுடை புறவரணும் பயனில.
பயப்படுதலிற்குப் பயப்படாமை பேதமை.
பயப்படுவதற்குப் பயமடைவது அறிவு.

*

பயம், பதட்டம், கவலை
பீதி, திகில் நடுக்கம்
அவநம்பிக்கையின் அனுபவமும் பயமே.
மனக்கலக்கம் அச்சுறுத்தல்களாலும் உருவாகும்
சுயமாகவும் குழுமுறையிலும் வரும்
பயத்திற்கு அபயம் தெய்வம்.

*

29-3-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

run

46. பா மாலிகை ( கதம்பம்) (  செயற்கரிய யாவுள நட்பில்.)

 

 

oo

*

  செயற்கரிய யாவுள நட்பில்.

*

(நீரவர் – அறிவுடையோர்.)

நீரவர் நட்பு தரளம் 
சேரவர் வரிசையில் பவளம். 
ஆரவாரம் இல்லா அகலம்.
தூரவர் விலகினும் சுகந்தம்.
கூரவர் அறிவு காவல்.

*

சர்வமும் தானெனும் பாரம்
கர்வம் நிறை இதயம்
தர்மம் நீதி நோக்காது
ஆர்வம் இழக்கும் நட்பிற்கு.
தார்மிகம் பாராது விலகலாம்.

*

பழகப் பழக இன்பமேவி
அழகான பிறையாக வளரும்
அறிவுடையார் அழிவில்லா நட்பு.
அல்லலில் உதவும், உளமார
நகும், நல்வழி காட்டும்.

*

வல்லவரெனும் எண்ணமுடை பொல்லாங்கு
வில்லத்தன நட்பு பாறையானது.
ஆடையவிழ கை உதவுதலாக
ஆபத்திலுதவும் நட்பை தேடலாம்.
அழிவின்கண் உடனிருக்கும் நட்பையெடு.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 18-3-2018

*

line3

44. பா மாலிகை ( கதம்பம்) குழந்தை.

 

baby13

*

குழந்தை.

*

வஞ்சகம் அறியாத
மிஞ்சுதலற்ற பருவம்.
பிஞ்சுக் குழந்தை
மஞ்சள் கட்டி.
¤
பஞ்சு மென்மைப்
பிஞ்சு உடல்.
கொஞ்சம் புஞ்சம்.(திரட்சி)
புஞ்சுதலாக்கும் (ஒன்று சேர்க்கும்) குடும்பத்தை.
¤
பிஞ்சுப்பிறையான மழலை.
பஞ்சணைப் புதையல்.
பிஞ்சுக் குழந்தையால்
பஞ்சமற்ற இன்பம்.
¤
சஞ்சலமழிக்கும் குழந்தை
செஞ்சுடர் குடும்பத்திற்கு.
துஞ்சுதலைப் பர்த்தால்
நெஞ்சு நிறையும்.
¤
குஞ்சுக் கால்களின்
கொஞ்சு நடையழகில்
ஊஞ்சலாடும் மனம்
குஞ்சிரிப்பு (புன்னகை) கோடியாகும்.
¤
அஞ்சுதல் இல்லாத
அஞ்சுகப் பேச்சு.
கொஞ்சிடும் சர்வலோக
சஞ்சீவி செர்க்கம்.
¤
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 11-8-16

*

குழந்தை

*

பஞ்சு உடல் மிஞ்சும் அழகு
கொஞ்சிடும் தெய்வம். கல்லும் கரையும்
பிஞ்சு மழலை மொழி கேட்டால்.
பச்சிளம் குழந்தை ஒரு வயது வரை.

நிறை வாழ்வின் அங்கீகாரம்.
நிகரற்ற இல்லற இன்பம் குழந்தை
கருவறை திறக்கும் திறவுகோல்.
கருவறைச் சிப்பியில் வந்துதித்த முத்து.

குழந்தையால் தான் தாலாட்டு வந்தது.
குடும்ப வாரிசுச் சங்கிலி வளையம்.
இல்லத்து விளக்கு பூமியின் நிலா.
அன்பின் இலக்கணம் சுவர்ண விக்கிரகம்.

உயிர் ஓவியம் வரம் இது.
குழந்தையில்லாதவர் தவமிருந்து பெறும் கொடை
பெற்றோர் அந்தஸ்து தரும் உயிர் சாரல்
பிரசவமென்பது குழந்தையின் மண்ணுலகப் பயணம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.22-6-16

*

Samme katu another poem:-  https://kovaikkavi.wordpress.com/2016/11/28/458-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/  

*

baby-items