17. பா மாலிகை ( காதல்)தென்றல் தீண்டி புன்னகைக்காதோ பூக்கள்.(512)

 

14100293_1767801220151319_556402917979584125_n (1)

*

தென்றல் தீண்டி புன்னகைக்காதோ பூக்கள்.

*

தென்றல் தீண்டி என்னைச் சீண்டி
கன்றல் நினைவுகள் கழன்றிடத் தூண்டி
மன்றம் நெருங்குதே மகிழ்வு வேண்டி
அன்றிலாய் மனம் பறக்குதே ஏண்டி!

*

மன்னன் வருவான் மனது நிறைப்பான்
அன்னம் எனது ஆசைகள் தீர்ப்பான்.
இன்னும் அழகை வேண்டி நிற்பான்
சின்னது பெரிதாய் மாலைகள் தொடுப்பேன்.

*

எந்த மலரும் மனது மயக்கும்
இந்த மணமும் நன்மை பயக்கும்.
சிந்தும் இன்பம் பெருக வைக்கும்.
முந்தி அவனை நெருங்கச் செய்யும்.

*

மாங்கல்ய பாக்கியம் தந்த அம்மனுக்கு
மகிழ்ந்து தொடுக்கும் மாலை சாத்துவோம்.
கண்ணன் வந்து காலாறிய பின்
கடிதே நாமும் கோயில் செல்வோம்.

*

காத்திருந்த காதல் கனிந்தமைக்கு நன்றி.
கருத்தாய் இணைந்து கல்யாணம் காப்போம்.
இன்னலற்ற இனிய இணைகள் என்று
பூரித்துப் பெருமையாய் புன்னகைக்காதோ பூக்கள்!….

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-8-16.

*

 

1457745k8p286od3g

 

Advertisements

4. பா மாலிகை ( காதல்)காதலனின் கண்ணீர் (7 1)

 

 

tear

*

காதலனின் கண்ணீர்

*

காதலன் கண்ணீர் கரைபுரண்டோட
தாடியோடு போத்தல் கையிலாட
காதலை வெறுத்து அவனோட
காப்பிட வேண்டும் இந்நிலையோட.

*

கல்வி கையகப் படவில்லை
கருமமாற்ற காசு வசப்படவில்லை
கடவுளான பெற்றோர் தடமாகியும்
கடமைகளோடு வாழ்வு தொடருகிறோம்.

*

காதலனின் கண்ணீர் உலகில்
கார்வையாக காவியப் படகில்.
காதல் காயம் கடக்கில்
காரிய சாதனை சாதிக்கலாம்.

*

காதலன் கண்ணீர் காலத்திற்கும்
காதோரம் வடியும் கங்கையாம்.
காளையவன் முதுமையிலும் கலக்கம்
காஞ்சிரமாய் கசக்கும் கசக்கும்!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-6-2016

*

drops

3. காதல் அழிவதில்லை (70)

 

12991098_1754097281543185_7417907894363565715_n

*

காதல் அழிவதில்லை

*

மைகொண்ட விழி மலர
மையல் கொண்ட மனமசைய
தையலே! உன் மொழியாலே
தைரியமே தினம் கைகாரியே!
*
கண்ணேந்தும் துயில் மறந்து
கருத்தேந்தி நிதம் நினைந்து
காதற் சாரல் தூவிடுதே!
காவிரியாகி மோதிடுதே!
*
வாலிபக் காதல் வசீகரத்தாலே
வயதில் வாசனை வீசுதே!
வாலாயமாகி விழுந்ததினாலே
காதல் போர்க்களமாகிறதே!
*
இளமை விருந்தால் வென்றிட
இதயம் தேடிப் போராடுதே.
இனியெதற்குப் போர்க்களம்!
இதய நிழலில் இளைப்பாறுவோம்!
*
பைந்தொடியே! உன் சுவாசத்தோடு
கையேந்தி நடை பயில்வோம்!
கைரேகை அழியும் வரை
வையகத்திலாடுவோம் பைங்கிளியே!
*
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 13-5-2016
*
(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)
*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

2. தேனினும் இனியது காதல். (69)

1383073_624407780944557_437286089_n

*

தேனினும் இனியது காதல்.

*

தேனினுமினியது காதல் ஊனையுருக்கும்
தேவ இரகசியமல்ல பூவுலக இன்பம்.
தேவனை, தேவதையைக் கண்டதும்
புலனைந்தும் தடுமாறி உலைதல்.

*

உயிரை உய்விக்கும் உன்னதம்
உடலைக் களவாடும் இளமையில்.
பயிராகிப் பயனீயும் முதுமையில்
ஒயில், பலம் காதல் யாகம்.

*

இயற்கையின் தேவை
இயல்பு நிலை.
கண்ணில் புகுந்து கருத்துக்
கவர்ந்து சுகிக்கும் காதல் தீ

*

கன்னல் இளமையிலின்னல் தருமிது
பன்னீரன்பால் பின்னிப் பிணையும்.
பார்வையூஞ்சல் பாந்தத் தொடுகை
ஏந்துமின்பம் ஏராளம்! ஏராளம்.!

*

அன்பிது பழகியறிந்தால்
துன்பியலிது பழகி விலகல்.
எதற்கிணையிது மதுவிது
அணைக்கவும் தீ அணையுது.

*

வஞ்சமற்று அள்ளி ஈவது
கஞ்சமற்று திரும்பக் கொடுப்பது.
விரல்கள் பத்துமுணரும் இன்பம்
வெட்கமில்லை வேண்டும் வரை

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-7-2016

*

(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)

*

1457745k8p286od3g

1. பா மாலிகை ( காதல்) – ஓரவிழிப் பார்வையிலே – (68)

*

ஓரவிழிப் பார்வையிலே தேனே
தாரகை நீயே ராணி
பாரம் சிறிது குறையுமே கண்ணே
சாரம் எதுவென்று கூறவா கண்ணே
*
நீந்துதே நிலவு முகத்திலுன் கூந்தல்
காந்த அலையொன்று கதம்பமாய் நெருங்குதே
அந்தக் கலை நின்றென்னை மயக்க
சொந்த நிலை அலர் நிலையாச்சுதே
*
இன்ப ஒளி விழியால் அன்பையூற்று
மன்மதப் பேரெழிலால் இன்னல் களை.
நன்றே என்னுள்ளில் நந்தவனம் நீயே
தென்றலாய் வீசு தெம்மாங்கு பாடு
*
எந்தன் அகத்தில் சுதந்திரச் சிந்தனைச்
சந்தனம் பூசுகிறாய் சகதியை நீக்குகிறாய்
தந்தனத்தோம் இசைக்கும் மந்திரக்காரி நீ
சிந்தும் இழிவற்ற காதலின் இலக்கணமே.
*
14-6-2016
வேதா. .இலங்காதிலகம்.
டென்மார்க்.
*
நேயர்களே இது எனது இரண்டாவது வலை. முதலாவது – வேதாவின் வலை.
இணைப்பு இதோ:- https://kovaikkavi.wordpress.com/
அங்கு பா மாலிகை காதல் தலைப்பில் 67கவிதைகள் உண்டு அதன் இணைப்பு:-  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/
*
Billedresultat for குழந்தை   தாயுடன்    அணைதல்