91. பா மாலிகை ( கதம்பம்)சாதனைகளை வெறுக்கும்! (583)

சாதனைகளை வெறுக்கும்!

வேதனைகளால் விறைத்திட்ட மனது
சாதனைகளை விரும்பாது வெறுக்கும்.
தீதினையே நேசிக்கும் எப்பொழுதும்.
மாதின் அழகோ கவர்ச்சியோ
மேதினியில் வெறுப்பாய்த் தோன்றும்.

புண்பட்டுக் காயமுடை மனதில்
நுண்ணிய தீண்டலும் வன்மையாகும்.
எண்ணங்கள் பரவசம் தராது
திண்மை நினைவுகள் தலைகோதாது.
பண்பான வார்த்தைகளும் தோன்றாது.

வஞ்சம், வேதனை பிறரை
நஞ்சாய் வெறுக்கும் நிலையாக்கும்.
கொஞ்சும் ஆனந்தமும் காண
நெஞ்சம் பற்றி எரியுமிதற்கு
அஞ்சாது உதவுவோர் மனவியலாளரே!

வேதா. இலங்காதிலகம்.( பா வானதி.)
டென்மார்க் 29-11-2018  

12. பா மாலிகை ( காதல் 79) எங்கேயும் காதல்.

எங்கேயும் காதல்.

காதல் களவாடும் இளமைக் காலம்

காதல் நதியின் இன்பப் பாலம்!

காமன் மலர்ச் சாரல் தூவல்

காதற் கலையின் சித்திரக் கோலம்!

காதல் தீ பனியாகிக் கொட்டும்

காதல் பட்டம் கண்களால் வானெட்டும்.

காதல் மாளிகை வார்த்தைகள் கட்டும்.

காதல் கவிதைகள் மழையாகப் பொழியும்!

*

உயிரை உய்விக்கும் உன்னதம் காதல்

பயிராகி வாழ்வில் பயனீயும் காதல்.

செயிக்கும் தாரக மந்திரம் காதல்!

ஒயிலாகி வாழ்விற்குப் பலம் தரும் காதல்.

மலையாய் நெஞ்சில் உயர நிற்கும்

விலையாய் மறுபடி அன்பே கேட்கும்.

அலையும் கண்கள் தரிசனம் கேட்கும்.

கலையாய் வாழ்க காதல் காலத்திலும்.

*

 12-7-2016-

90. பா மாலிகை ( கதம்பம்) போதை. 582

போதை

உருகும் உறவு, பெருகும் செல்வம்,
பருகும் அறிவு, திருவான பதவி,
நெருங்கும் புகழ், மருவும் போதைகளில்
கருகாதெமைக் காத்தல் ஆரோக்கியப் பாதை

கோதையில் குவிந்த கோமள போதை
சீதை பட்ட அவலப் பாதை
கோதைகள் பலரின் வேதனைக் காதை
பாதை மாற்றும் கொடிய பாதை

கலைகள் கவிதை பொங்கும் வனப்பில்
நிலை மயக்கும் ஆசைப் போதையின்
அலையும் சுழியில் அகப்பட்ட வாதையில்
உலையாது ஏற்கலாம் கீதைப் பாதையை.

மனிதனின் உயர்ந்த மனுநீதிப் பாதை
புனிதம் இழப்பது போதைகளாலே
கணிதம் பிசகிய போதையின் எல்லை
கட்டோடு தரித்தல் யெயத்தின் கொல்லை.

11-6-2007

ஐரிஆர் கவிதைச் சாரல் வானொலியில் என் குரலில் (31-7-2008)

89. பா மாலிகை ( கதம்பம்) அவளும் நானும். 581.

அவளும் நானும்

அவளும் நானும், அஞ்சன விழியும்
அமுத சுரபியும், அமுதத் தமிழும்
குமுத மலரும், குலவும் வண்டும்
சமூக ஒற்றுமையும், சங்கீத இனிமையும் (அவளும் )

மழலையும் மொழியும், மகிழ்வான திருமணமும்
வழங்கிடும் பழக்கங்களும், வழிபடும் தெய்வமும்
புழங்கிடும் கலாச்சாரமும், புதுமை நாகரிகமும்
அழகுடைத் தேவதையும், அற்புத நடனமும் (அவளும்)

பாலும் பழமும், பாவமும் இராகமும்
பாசமும் பாட்டியும், பாகும் பருப்பும்
பாண்டித்தியமும் தமிழும், பாதமும் சலங்கையும்
பாப்பாவும் பொம்மையும், அவலும் தேங்காயுமாய் (அவளும்)

புதுக் கவியும், மரபுக் கவியும்
மதுகையும் மொழியும், மகத்துவமும் அறிவும்
மகளிரும் நாணமும், மஞ்சளும் முகமும்
மகிழ்வும் குடும்பமும், மண்ணும் நேசமுமாய் (அவளும்)

இரு விழிகளும், இன்ப இதழ்களும்
மருகும் மனமும், மாசற்ற காதலும்
திருவும் திருமதியும், திகட்டும் முத்தங்களும்
தினமும் என்னோடு, அவளும் நானும்.

30-7-2018


88. பா மாலிகை ( கதம்பம்) எனக்குள் இப்படி ஒரு ஆசை 580.

எனக்குள் இப்படி ஒரு ஆசை

இலையும் பூவும் இணைந்த தருக்கள்
இயற்கை அற்புதம் இணைந்த அழகுகள்
நல்ல மனம் குணத்தின் இணைவு
நலம் தரும் மனிதநேயத்தின் அமைவு.
இனிய உலகில் இதமான மனிதம்
இசைய வாழ்வது எனக்குள் ஆசை

முளைவிடும் கொடிகள் மூன்றிலை தொடர
முனைந்து அலைவு கொழுகொம்பில் படர
பற்றுக் கோடற்ற பசுங் கொடிகள்
தொற்றுதல் ஒன்றே பிரதானமாய்ப் படர்ந்து
சுற்றுப் புறத்தில் எதிலும் தொற்றி
குற்றம் குணம் தெரியாது சுற்றும்.

நல்ல கொழுகொம்பு நழுவும் நிலையே
நாளது வரையும் நழுவும் இளையோர்.
நல்ல பற்றுக்கோடாய் மனிதன் இருந்தால்
நலம்கொள் இளையோர் பற்றிப் படர்வார்.
எனக்குள் இப்படியொரு ஆசை மட்டுமல்ல
எனக்குள் இப்படியொரு நூறு ஆசைகள்.

அன்பின் அலை மோதி மோதி
பணத்தின் அணை உடைந்து நொறுங்கட்டும்
பாசம் நேசம் ஆதரவு மறந்த
பண இதயங்கள் கரைந்து போகட்டும்
பாச, நேச, தாக இதயங்கள்
பணத்தால் நலிந்து அழிந்திட வேண்டாம்

அன்புமொழி உலக மொழி யாகட்டும்
பண அதிகாரம் நொறுங்கி அழியட்டும்
எனக்குள் இப்படியொரு ஆசை மட்டுமல்ல
மணக்கும் ஒரு நூறு ஆசைகள்
விதைக்குள் மரமாய் முட்டையுள் பறவையாய்
கனத்து உருண்டு கனவுகள் காணுது.

31-8-2002

2. சிறு கட்டுரைகள், குறிப்புகள் -டென்மார்க் தமிழ் கலைஞர் சங்க விழாவில் 20-5-2018

டென்மார்க் தமிழ் கலைஞர் சங்க விழாவில் 20-5-2018


இது கலைகளைத் தாலாட்டும் விழா.என்கிறேன் நான்.
கலைகளை, ஆக்கத்திறனை ஊக்குவித்து, இலைமறை காயின்றி ஆதரித்தல்.குலையாது நிமிர்ந்திட கௌரவித்தல்.. கௌரவிக்கவும் ஒரு மனம் வேண்டும். கௌரவிப்பது மட்டுமன்றி ஆவணப் படுத்த வேண்டும். விழாவிற்கு பொறுப்பாளர்களிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும். அடுத்து இங்கு தம் திறனை வெளிப் படுத்தும் அனைவருக்கும் வாழ்த்துகளும் இறையாசியும் உரித்தாகட்டும்.இங்கு கலையைப் பற்றி சிறிது கூறி ஒரு சிறு கவிதையுடன் உங்களிற்கு இடம் விடுகிறேன்.மற்றைய உயிரினங்களிலிருந்து மனிதனைத் தனித்துக் காட்டுவது கலை நுட்பமே.வரலாற்றுக்கு முந்திய காலக் கலைகள், அமெரிக்க, ஓசானிய, ஆபிரிக்க, ஆசிய , ஐரோப்பிய, சுதேசக் கலைகள் என்றும்பண்டைய உலகின் கலைகளாக மொசப்பத்தெமியா, சுமேரிய, பாபிலோனிய அசிரியக் கலைகளாகவும், எகிப்திய , ஏஜியன், கிரேக்க, ரோமம் என்று பலவகை.கலைகளைப் பல வகையாகப் பகுக்கலாம் நுண்கலை- நுண்ணிய திறன் உணர்வு கொண்டது. நடனம் கவிதை இசை..இதிலடங்கும்.பயன்கலை- இது கட்டிடம், திரைப்படக் கலையாகும்.அடுத்து பருண்மைக்கலை- இது பினாஸ்ரிக் ஆட் என்று கட்டிடம் சிற்பம் ஆகும்.கவின் கலை:- ஓவியம், ஒப்பனை ஏஸ்தெற்றிக் ஆட் என்பதாகிறது.நிகழ்த்துக் கலை பெர்போமிங் ஆடஸ்;- ஆடல் கூத்து நாடகம் .இதில் இசையும் அடக்கலாம். இவை முக்கியமானவை. இதில்எனது பாதை கவிதை.கவிதை இலக்கியத்தின் அரசி என்பர். இதுவே மூத்தது. நடுமையானது
. இனி_____________________________________

கலை என்பது இனத்தின் அடையாளம்
நிலைவாழ்வின் எச்சம்
கலையொரு வெளிப்பாடு
உள்ளுணர்வின் சுதந்திரம்.
கலைகள் பண்பாட்டு ரீதியாக
பண்பாடு கடந்த ஓரழகிய மொழி.

இயந்திரமாய் இயங்கும் வாழ்வில் ஓர்
இதமான இயக்கம் கலை. உடலின்றி
இதயமும் இங்கிதமாய்க் கலக்கும் வேட்கை.
இன்னுமின்னும் என்று மனதை இயக்கும்.

வல்லமையின் உயிர் கலை நுட்பம்
நல்ல கற்பனையின் உள் எழுச்சி.
பல்லின விலங்கியலற்ற மானுட வேறுபாடு.
வெல்லும் அகன்ற வரையறை கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை கலை
பயனுடை திறமை அறிவியல் நுட்பக் கணிப்பாயிருந்தது.
பின்னாக அழகியல், கற்பனை திறமை
பயனுறு கலை – நுண்கலைகளாகவும் பகுக்கப்பட்டது.

கலையும் பல சமுதாயத் தாக்கம் தாங்கியது.
சிற்பமோவியம், ஒளிப்படம், கட்புலக் கலையாகவும்
சொற்பொழிவு, நடனம், நாடகமிசை தற்காப்புக் கலையாகவும்
அரங்காடல் கலையாகவும், கதை, கவிதை, கட்டுரை
நாடகவியல் எழுத்துக் கலையாகவும் உள்ளது.

இன்று ஊடகக் கலை நவீனமென்றுள்ளது.
அன்று ஆயகலைகள் அறுபத்துனான்கு என்றனர்.
நன்றான கலைவரலாறு கற்காலம் தொடங்கி
உலகின் பல நாகரீகங்கள் கலைவரலாறு உள்ளடங்கியதே.

சரித்திரச் சித்திரங்களிற்கு
கலைகள் சிறந்த ஆதாரம்.
தூரநோக்கக் கண்ணாடியுமாகிறது.
இதை இப்படிச் சிறிதாகச்
சொல்லி முடிக்க முடியாது.
கலை பெருங்கடல்.

வேதா. இலங்காதிலகம்.(இலங்கை) டென்மார்க் 24-5-2018

87. பா மாலிகை ( கதம்பம்) எது நிசம் உலகில்! 579.

எது நிசம் உலகில்!

நினைத்தது போல் இல்லையெனில்
ஏறுதலும் இறங்குதலும்
மாறுதலும் அழிதலும்
ஒருவகையில் சமமன்றோ!
நெஞ்சில் நேர்மையிறந்திடில்
நெருஞ்சிமுள் நடைபாதைகள்.

ஏய்க்கும் பிழைப்புகள்
ஏமாற்றும் அனர்த்தங்கள்
ஏய்த்துப் பிழைத்திட
வாய்ப்புகள் தாராளம்.
வாய்ப்புகள் நீளவதில்லை
தீர்ப்பு கிடைத்துவிடும்.

ஓற்றை மனிதனுழைப்பில்
மற்றவனெழுப்பும் அத்திவாரம்
ஒற்றையவன் தூங்கும்வரை தான்
சற்றும் தயங்காது விழிக்கும் போது
பற்றிவிடும் நெருப்பு
முற்றுப் புள்ளி வந்துவிடும்

29-11-2001
ரிஆர்ரி தமிழ்அலை வானொலியில் சாளரம் நிகழ்வில் சகோதரர் அமரர் வியூகன் வாசித்தார்.  

86. பா மாலிகை ( கதம்பம்) சாவிலும் முந்தி. 578.

சாவிலும் முந்தி

நிதானம் அவசியம் மனிதனுக்கு
வாகனம் கையாளும் ஒருவனுக்கு
சடுதியாய்க் கேட்ட செய்தியால்
தடுமாறி விட்டேன் அதிர்ச்சியால்

வாகன விபத்தெனும் இருளாடையை
வலிந்து போர்த்திய உன்னவனை
கடிந்து கொள்ளவும் வகையின்றி
மடிந்து விட்டானே மதியின்றி

சொத்தான உன்னைத் தனியாக்கி
முத்தான குழந்தைகளை உன்னோடு
இத்தனையவசரம் அந்தக் காலனுக்கா!
அத்தனை அவசரமுன் கணவனுக்கா!

பனித்துளியல்ல நீ மழைகரைத்திட
இனி துளித்துளியாய் மனசக்தியைத் தேட
சோகம் வடிய நீ எழுந்திடுவாய்
பாவம் குழந்தைகள் நினைத்திடுவாய்.

மற்றவனை முந்தியெதிலும் முன்னேற
மறத்தமிழனுக்கு எண்ணம் உயரேயேற
சாவிலும் முந்தியவன் வாகனவிபத்தென்று
சரணமடைந்தானே சாவு என்று!

5-11-2000
(பழகிய தோழிக்காக எழுதியது)
இலண்டன் ரைம் வானொலியில் வாசிக்கப்பட்டது.

85. பா மாலிகை ( கதம்பம்) திறந்த புத்தகம்… 577.

திறந்த புத்தகம்…

இலையை மட்டும் நனைக்கும் சாரலாய்
தரையை வேரை நனைக்காத் தூறலாய்
பெய்யைப் போர்த்து மெய்யைப் புதைத்து
கையைச் சுடுகிறார் இல்லற வாழ்விலே

இணைந்த ஈருயிர் இல்லறப் பாதையில்
பிணைந்து நன்மைகள் பகிர்ந்து துணையுடன்
அணைந்தும் பேதையென முன்னாள் கதைகளை
கணையாழியிட்டும் முற்றாய் மறைத்திடல் தகுமா?

இன்பம் வனைந்தவள் இறுதியில் கேட்கும்
துன்பக் காதல் இரகசியத் தூவலால்
நோதல் செய்தல் பாவமென்றெண்ணி ஒருவர்
காதல்    தோல்வியை மறைப்பது நன்மையா!

திறந்த புத்தகமாய் துணையுடன் வாழ்வை
தினமும் பகிர்தல் நலமா கேடா!
பிறர் பழிக்கும் இல்லறம் தவிர்ப்பீர்
அறம் நிறையில்லறம் ஆனந்தமாய்க் கொள்வீர்!.

11-2-2002
ரிஆர்ரி தமிழ் அலையில்

84. பா மாலிகை ( கதம்பம்) ஸ்நேகித ஆதங்கம். 576.

ஸ்நேகித ஆதங்கம்.

(பிரான்ஸ் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியில்
சிறந்த ஒரு வித்தக அறிவிப்பாளர்
வியூகன் என்ற கீழ்கரவைப் பொன்னையன்.
சாடையாகக் கூறினார் தன் வாழ்வு
நோயினால் முடிவடையப் போகிறது என்று
நொறுங்கியது மனது சடுதியான அதிர்ச்சியால்
அப்போது 15-6-2001ல் எழுதி வாசித்தது…)

ஸ்நேகித ஆதங்கம்.

நீர்கொள் மேகம் சேர் குளிர்வாடையாய்
கார் கொள் மனங்கள் சேர் தமிழ்வாடையாய்
அறிவுத் தமிழ்க் குளிர்வாடை வீசுகிறாய்
செறிவுக் கதிர் வீசி ஆக்கிரமிக்கிறாய்

ஒரு வார்த்தை கொடுத்தால் அதை
ஒரு மணிநேரம் சிலாகித்து பிரசங்கிப்பாய்
நீயொரு நிலவாய் தண்ணொளி வீச!
நாமெல்லாம் அல்லியாய் தண்ணொளியில் மலர

இத்தனை திறமை நீ கொண்டாயே!
வித்தகம் கண்டு நாம் வியந்தோமே!
புத்தகமாய் புதுப்புதுப் பக்கமாய் விரிகிறாய்!
முடித்திட வேண்டாம் முழுவதும் வேண்டுமிறைவா!

15-6-2001

இந்த இணைப்பில் இவரது கண்ணீர் அஞ்சலிக் கவிதைகள் உண்டு.

https://kovaikkavi.wordpress.com/2010/11/10/27-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D/