சிறுவர் பாடல்கள்.

6 பால் அப்பம்
00

கிட்ட வந்த நிலவாம்
வட்ட வட்ட அப்பம ;
தொட்டுத் தொட்டு ருசிக்கும்
கட்டிப் பால் அப்பம்.
00
முறுகலான கரைகளைப் பிய்த்து
முங்கிப் பாலோடு ருசித்தால்
முழுதான பால் அப்பம்
மிகச் சுவையாக இனித்திடும்
00
அம்மா சுட்ட அப்பம்
அத்தை சுட்ட அப்பம்
பாட்டி சுட்ட அப்பம்
பலவகையாய் இனிக்கும்.
00

வேதா. இலஙகாதிலகம்
(ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியை )
டென்மார்க்—11-8-2021
00

5. சிறுவர் பாடல்கள். – வானவில்

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.3)

வானவில்

வண்ணங்கள் விரிக்கும் வில்
எண்ணங்கள்பெருக்கும் வில்
பென்னம் பெரீ……ய வில்
அண்ணாந்து தரிசிக்கும்வில்.

வானத்திரையில் விழும் அது
‘ வானவில் ‘ எனும் வில்அது
வளைக்க நாண் இல்லா வில்.
வளைத்திட முடியாத வில்.

மழை – வெயில் இணைந்து
இழையும் காலநிலைக் கலவை
ஏழு வண்ணங்களின் ஆட்சி
நீளும் கற்பனைக்குச் சாட்சி

வாழும் காலத்தில் நினைக்க
நாளும் மனதில் பதிக்க’
ஏழு வண்ண முதலெழுத்து
குழுநிலைச் சொல் – Vibgyor

கத்தரி (violet )கருநீலம் (indigo )
நீலம் பச்சை மஞ்சள்
சிவந்த மஞ்சள்(orange) சிவப்பில்
உவந்த ஏழு நிறத்து வில்.

(26-7-2003 14-11-2003 குழந்தைகள் வானவில் தலைப்பில்
ETBC ஊடாகஇலண்டன் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது)

4. சிறுவர் பாடல்கள். – பந்து

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.2)

பந்து

பந்து எந்தன் பந்து
பஞ்சு போன்ற பந்து
பாரமில்லாப் பந்து
பாப்பா சொந்தப் பந்து

பந்துகள் உருவம் வட்டம்
பந்துகளில் பல திட்டம்.
கைப் பந்து ஒன்று
காற் பந்தும் உண்டு

வலைப் பநது என்றும்
கூடைப் பந்தும் ஒன்று
ரென்னிஸ் பந்தும் உண்டு.
கிரிக்கெட் பந்தும் உண்டு
.

கொக்கிப் (hokey)பந்தும் ஒன்று
போலோ(polo) பந்தும் ஒன்று.
கொல்வ் (golf)பந்தும் உண்டு.
றகர் (rugger)பந்தும் உண்டு.

பூம்பந்து ஆட்டம்
நீர்ப் பந்து ஆட்டம்
டேபிள்(table tennis) ரென்னிஸ் பந்தென
பந்தின் சொந்தம் கேட்டீர்

ந்து பொந்தில் பதுங்காது
பந்து விளையாடி நான்
முந்தி வெற்றி பெற்றிட
உந்துகிறது என் மனம்.

(7-6-2003ல் கவிதை நேரத்தில் இலண்டன் ரைம் வானொலியில் வாசிக்கப் பட்டது)

3. சிறுவர் பாடல்கள். – வெள்ளை நிறம்.

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.1)

வெள்ளை நிறம்.

பால் வெள்ளை நிறம் பாப்பா – உந்தன்
பல்லும் வெள்ளை நிறம் பாப்பா
பஞ்சு வெண்மை நிறம் பாப்பா- உந்தன்
பஞ்சு மனதினைப் போலே

மல்லிகை மலர் உனக்குத் தெரியுமா?
மனது மயக்கும் வெள்ளை தானே!
முல்லை மலர் உனக்குத் தெரியுமா!
கொள்ளை அழகு வெள்ளை தானே!

கோழி முட்டை உனக்குத் தெரியுமா!
கொக்கு எனும் பறவை தெரியுமா!
எல்லாம் வெள்ளை நிறம் தானே!
செல்லக் குட்டி உன் மனசுபோலே

வெள்ளை நிறம் அமைதி நிறமாம்
வெள்ளைப் புறா சமாதானப் பறவையாம்
வெள்ளையில் அழுக்கு விழுந்தால்
வெளிச்சமாய்த் தெரிந்து போகும்.

பிள்ளை உன் வெள்ளை மனதிலே
புள்ளி அழுக்குப் பட விடாதே!.

(24-4-2000ல் ரிஆர்ரி இலண்டன் ரைம் வானொலியில் சகோதரர்கள் இசங்கீரன் இசையில் சுதா பாடினார்.
4-6-2002ல: ரிஆர்ரி கலைக் கதம்பத்தில் வானலையில் என்னால் வாசிக்கப்பட்டது.)

2. சிறுவர் பாடல்கள். – பம்பரம்.

பம்பரம்.

பம்பரம் பம்பரம் புதிய பம்பரம்
சுற்றி ஆடும் சுளன்று ஆடும் (பம்பரம்)

நூலைக் கம்பில் சுற்றுங்கோ சுற்றுங்கோ
நூலைக் கட்டையாய் சுற்றுங்கோ சுற்றுங்கோ (பம்பரம்)

பச்சை வளையம் கையால் அழுத்தி
நூலை இழுங்கோ நூலை இழுங்கோ
பம்பரம் சுற்றும் சற்றிச் சுற்றி
சுளரும் சுளரும் பம்பரம் சுற்றும் (பம்பரம்)

பாடல்:- வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 27-5-2015

1. சிறுவர் பாடல்கள்.பச்சைக்கிளி

kili

*

பச்சைக்கிளி

அன்பாலே பேசி அணைக்கலாம் உன்னை
வன்முறைக் கிளி, யோசியக் கைதி.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை நீ
செவ்வாரமுடை சொக்கும் சொண்டுக்காரி நீ

அலெக்சாண்ட்ரினா பரகீட் உயர்தரக் கிளியாம்
அடர்ந்த காட்டில் வசிக்கும் நீளமானவளாம்
விலை இரண்டாயிரம் ரூபாவாம், கோவை
வஉசி உயிரியல் பூங்காவில் காணலாமாம்.

பச்சைக் கிளி, பால் சோறு,
கொச்சி மஞ்சள், கொஞ்சி விளையாட
அச்சா குழந்தைப் பாடல் வரிகள்
இச்சையாய் இசைந்து பாடுவார் அழகாக.

பா வரிகள்
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17.5.2016

வேறு

பச்சைக்கிளியே வா வா வா
பாலும் சோறும் உண்ணவா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞஇசி விளையாட வா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடி களித்து வா
கையில் வந்து இருக்கவா
கனி அருந்த ஓடி வா

*

26 சிறுவர் பாடல்கள் எனது முதலாவது வலையில் உள்ளது.
இணைப்பு இதோ…

https://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

kili