27. கண்ணகி(14 )-மாமலை சபரியிலேமணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாநில மக்களுக்கு ஆசியிடும் அருள்தானம்.
பாதமிட பதினெட்டுப் படியுடைய புண்ணியதானம்
பதினெட்டு படிகளோ தங்கத்தகடாலான படிவம்.

பதினெட்டு மலைகளின் இடையிலான பக்திதானம்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை சந்நிதானம்.
பாவங்களழித்திட நாற்பத்தொரு நாட்கள் புண்ணியகாலம்
பிரமச்சாரி ஐயப்பனுக்கு இருமுடி தரிசனம்.

பாற்கடல் அமுதம் பகிர்ந்த மோகினியின்
ஆற்றல் நோக்கில் கவிழ்ந்தார் சிவன்.
தோற்றினார் ஐயப்பர் விட்டுணுவாம் மோகினியின்
வயிற்றிலொரு தேவ குழந்தைக் கருவாக.

மணிமுடி அரசர் பந்தள மகாராசா
மணிமுத்துப் பிள்ளை வரம் வேண்டினார்.
அணிசேர் பம்பாதீரத்தில் தெய்வக் குழந்தையாய்
மணிமாலை கழுத்துடைய பிள்ளையை வளர்த்தார்.

வளர்ப்பு மகனுக்கு முடி சூட்ட
வளர்த்த அரசி முரண் ஆகிட
வனைந்தாள் சூழ்ச்சி தனக்கொரு நோயென்று
வளப்பம் தருமாம் புலிப்பால் என்று.

எவரும் தேடவியலாப் புலிப்பாலுக்காய் எல்லாமறிந்தும்
எழுந்து காடேகினான். மகிசியாம் அரக்கியையும்
எதிர்த்துக் கொன்றான். புவிக்கு மணிகண்டன்
உதித்த காரணமும் நிறைவு பெற்றது.

புலிவாகனமாய் இந்திரன் மாற தேவர்கள்
புலிக் கூட்டமாக நாடேகினார் மணிகண்டன்.
கிலிகொண்ட இராணி உண்மையை யுரைத்தார்.
வலிவாம் தவமியற்ற ஐயப்பன் சபரிமலையேகினான்

14-6-2018

26. கண்ணகி(13 )-

மன்னன் தசரதன் மருமகள்கள்.

(சனபதி-அரசன்)

சனகன் செல்விகள் சீதா, ஊர்மிளை
சனகன் தம்பியின் சுருதகீர்த்தி, மாண்டவி,
சனபதி தசரதனின் சக்தியுடை மருமகள்கள்.
இனப் பெருமை காத்து இனிதாய் வாழ்ந்தனர்.

யாசித்தான் சத்ருக்னன் யோகச் சிவதனுசுகாண
யோசித்தது சுருதகீர்த்தியைச் சந்திக்க என்று!
நேசிப்பால் கேலி நாசுக்காகக் செய்தனர்…
மாசில்லாக் காதலிரகசிய மாயம் அது!

அவதானம் தம்மிணைகளை அணுகலாமோ என்று,
தேவதைகள் தசரதன் பாதபூசைக்காய் வந்தனர்
தாவிடும் ஆசை தாபமாய் கண்களில்
தாபம் தீர்ந்து திரும்பினர் அரண்மனைக்கு.

மாண்டவி பரதனிணை, மூத்தவள் குசத்வசனுக்கு.
மாசறு புச்(ஸ்)கலன், தக்சனை பெற்றெடுத்தாள்.
மனதார பரதனுடன் பாதுகையை வணங்கி
மாநதியில் ஓடும் சருகாக வாழ்ந்தாள்.

சுருதகீர்த்தி சத்ருக்னனிணை, சகோதரி மாண்டவிக்கு.
சந்திரசேது, அங்கதன் சந்ததியான மகன்கள்.
இராமராச்சியத்துடன் மதுராபுரியை இணைத்து முடிசூடிய
இராணியாக சத்ருக்னனுக்குக்கை யிணைத்துச் சிறந்தாள்.

இலட்சுமணன் ஏற்று இணங்கிய தியாகப்பணி
இலட்சணமாக நடக்க தன்னை வெறுத்து
இலட்சுமணன் ஒதுங்கும் இயல்புச்சூழல் உருவாக்கி
இலட்சணமாய்த் தன்துயர் ஆழப்புதைத்தாள் ஊர்மிளை.

பதினான்கு ஆண்டுகள் ஊன் உறக்கமின்றி
பக்குவமாய் அரண்மனைக்குள் அஞ்ஞாத வாசத்தை
பத்தினியாய்க்; கணவனுக்காய் பகிர்ந்த துணை
பரமதியாகி ஆகினாள் தசரதனின் மருமக்களுள்.

மருமகள் சீதாபுராணம் இராமாயணமாகுமே!

7-6-2018

25. கண்ணகி(12)-

தோழியர் குறும்பில் சொக்கிடும் தலைவியர்…

குறும்பு வில்லெடுக்க விரும்பும் தோழியர்
கரும்பு அம்பைக் காலகாலமாய்த் தலைவிக்கெய்வார்
பெருகும் வம்பு, விரும்பும் கிண்டல்
அரும்பி மலரும் அதிகளிப்புச் சேட்டை.

அரசகுமாரி தடாதகைப்பிராட்டியார் அழகு நந்தவனத்தில்
பரவசமாய் ஊஞ்சலில் பாங்கியரோடு ஆடுகிறார்.
உரசிய பட்டாடை ஊடி விலகியபாதத்தில்
அரவிந்தமாய்ச் சிவந்த ஆழத்தழும்பு கண்ணுற்றனர்.

” கிட்டேவாடி! தோழியிதைப் காணேன்!” அழைத்தனர்.
வட்டமாய்க் கூடி வகையாய்க் கிண்டலடித்தனர்.
கிட்டிய சிற்றூடலில் என்னுயிர்த் தலைவன்
ஒட்டியுறவாட ஊடல் ஒழிக்க எண்ணினான்.

கூனற்பிறையுடன் பாதத்தில் குனிந்து தலைவைக்க
கூர்பிறை குத்திய காயமென்றார், நாணிச்சிவந்தார்.
கூறியது அந்தரங்கம்! தோழியர் குறும்பிலே சொக்கினார்.
சேடியோடி வந்து தலைவி தலைதடவியாற்றினாளாம்.

கண்ணகி கைப்பற்றிய கோவலன் தீயை
வண்ணமுடன் வலம் வந்;து வணங்கியதும்
அண்ணித்தனர் தளிர்மேனி அழகு மங்கையர்.
விண்ணதிர மலரேந்தி விசிறியகுறும்பால் கலகலத்தார்.

கண்ணும், நாணத்தால் கன்னமும் சிவந்தன.
பெண்ணிலை மயக்கும் பூவாம்குறும்பு விசமம்.
பண்ணோடும் காதலுணர்வு பாவுதலாக மயங்கினாளரசி
பண்போடு காமமரவணைக்கப் பாயும் கொல்லெனும்சிரிப்பு

இழிவற்ற படைப்பு இலக்கணத்தின் அவசியத்திற்காய்
அழியாத காதல் அரவணைப்பிற்காய் உயிர்கள்
எழிலான மேனியேங்கும் எகிறும்பருவ தாகத்திற்காய்
எத்தனை சொக்கிடும் மாயக் குறும்புகள்.!!!!!!!

31-5-2018

24. கண்ணகி(11)-

இலக்கியச்சாரல்-45- 24-5-2018

அணி இலக்கணத்தில் அழகுறும் தமிழ்
பூந்தேன் மொழி தாய்

நந்தவனம் மொழியில் நெய்!
எந்தனுயிரும் தமிழ் மெய்.
வந்தனை தமிழுக்குச் செய்! 
முந்தையோர் தந்தது துய்!

பூந்தேன் சுவையது கொய்!
மாந்திட விரைவாகப் பாய்!
வந்திட்டால் ஒட்டிடும் நெய்.
மந்தம் மொழியோடென்றால் நோய்.

வந்தோம் உலகிற்கு மெய்.
பந்தம் மொழியோடு நெய்!
அந்தம் வரையுன் தாய்
செந்தமிழ் என்பது மெய்.

பிந்தாது சோம்பலைத் தீய்!
மீந்தது இன்றி மேய்!
காந்தமென மொழியோடு சாய்!
வேந்தனாய் மொழியில் ஆகுவாய்.

சிந்தனை யுத்தம் செய்!
கந்தனை நிதம் பாடுவாய்!
தீந்தமிழால் மரபு காப்பாய்!
சந்ததிக்கு மொழி காப்பாய்!

தினம் தமிழை ஆய்தலாய்
கனமின்றி மனதுள் புகுத்தலாய்
இனம் ஆக்கு நண்பியாய்.
சனம் விரும்பும் உண்மையாய்.

உன் புதையல் பெட்டகமாய்
இன் தமிழ்த் தேராய்
உன்னத வாழ்வில் ஊர்வலமாய்
என்றும் வருவாளே தமிழ்த்தாய்.

23. கண்ணகி(10)- மணிமேகலை(10) கம்பர் (3) – சான்றிதழ்கள் – கலை வாழ்வும் கவிதைத் தமிழும்.

கலை வாழ்வும் கவிதைத் தமிழும்.

கலை வாழ்வும் கவிதைத் தமிழும்
விலையின்றிப் பின்னியது தமிழர் வாழ்வில்
கலைநயமிகு மூவேந்தரே மையலுற்று வளர்த்தார்.
சிலை சிற்பமதிசய மாமல்லபுரமும் ஒப்பில்லா
மலைகுடைந்த தஞ்சைப் பெரிய கோவிலுமாதாரம்.
மலைப்புடைய இயலிசை நாடகம் வில்லுப்பாட்டென
அயல்நாட்டிலும் புலம் பெயர் தமிழரும்
புயலென வளர்க்கிறார். உலகமயம் ஆகிறது.

பொம்மலாட்டம், நாகசுரம், கெட்டி மேளம்
எம்மவர் விழாக்களிலெங்கும் பறை கொட்டியுயருகிறது.
நம்மவர் கவிதையுருவாக்கம் நாள்தோறும் வெளியீட்டுலா.
கும்மியடிக்கிறது இணையத்தளம் முகநூல் கவிதைவிழாவென.
யாரடித்து நீயழுதாய்!…. நிலாவை கிளியை
ஓடிவாவென தமிழிசையுயர்ச்சி தாலாட்டு, நாட்டுப்பாடலென.
ஆடியோடும் பிள்ளைகள் திருக்குறள் விழாக்களில்
சூடுகிறார்கள் மகுடம் பேச்சுக்கலை பட்டிமன்றமாக.

வரலாற்றுப் பதிவான பரதம், இசையும்
திரைப்படக்கலையும் அகம் – புறமாய் உயர்கிறது.
ஊடகக்கலையுயர இளையோர் தன்னிகரற்ற சுயகவிதையால்
இறுவெட்டுகள் பெருக்கம் சங்கத் தமிழாயுயர்ந்து
வறுமையின்றித் தாமரையில் தமிழாக நிபுணத்துவமாகிறது.
முறுவலுடை நகைச்சுவைக் கலையும் எழுச்சியாகட்டும்
மறையாது பண்பாட்டுடன் தனித்துவமாக வளரட்டும்!
அறுபத்துநான்கு கலைகளோடு கவிதைத் தமிழுமுயரும்!

( நாகசுரம் – நல்ல தமிழ்ப் பெயர்)

28-12-2017

22. கண்ணகி(10)- மணிமேகலை(10) கம்பர் (3) – சான்றிதழ்கள் – கவிதைகள்.

ஆணவம். (2வது கம்பர் சான்றிதழ்)

மும்மலங்கள் ஆணவம், கன்மம், மாயை
எம்மைப் படுத்தும் பாசத்தின் கூறுகள்.
நம்மை ஆள்வதும் ஆள எண்ணுவதுமானவிருள்.
அம்மணமாக்கும் மனிதனை ஆகாத திமிர்.
அளவற்ற ஆணவம் அழிவின் சிம்மாசனம்.
ஆற்றலையழிக்கும் திமிரணைந்தால் வலிமைச் சாவியையிழப்போம்.
அரசன் அரசியாக மனிதனையாணவம் உருவகிக்கிறது
ஆகாத பேயாணவத்தை அடக்கமே அமரராக்குகிறது.


செறிவுடைய மெய் பொய்யைப் பகுத்துணராது
அறிவை முற்றாக மறைக்கிறது ஆணவம்.
வெறியோடு தலை குனிய விடாதது.
குறிப்பாக மயங்கும் நிலையை உருவாக்குகிறது.
அகந்தையால் கோணும் ஆணவச் செங்கோல்.
அகமாட்சி தொலைத்து ஒருவனை அநாதையாக்கும்.
அகல நீளம் பார்க்காத அகம்பாவம்
ஏழ்மை இதயத்தை ஏறிட்டும் மதிக்காதவுணர்வு


நான் எனுமெண்ணம் மனிதனுக்கு வந்தால்
தான் தோல்விப் பாதையிலேகுகிறான் எனலாம்.
சிவன் பக்தன் இராவணனழிந்தான் ஆணவத்தால்.
சிகரமேறவிடாத தளம் அடங்காத மமதை
உயிர்ப் பறவை உலகில் வாழ
பயிர் செய்யும் அன்பும் இன்சொல்லும்
உயரவிடாது இயல்பாக ஆணவத்தை அடக்கும்
ஆணவத்தால் அழிந்தவர் துரியோதனாதியராகிய கௌரவரும்.


ஆணவமகற்றி வாழ்தல் மாபெரும் சாதனை

22-8-2017

21. கண்ணகி(10)- மணிமேகலை(10) கம்பர் (3) – சான்றிதழ்கள் – கவிதைகள்

எழுதிச் செல்லும் விதியின் கைகள்

எழுதிச் செல்லும் விதியின் கைகள்
எழுதி எழுதி மனம் வருத்தும்
அழுது அழுது ஆண்டவனை வேண்டியும்
தொழுது கேட்டாலும் தொடர்வது தொடரும்

எய்தல் தருமமாய் என்றும் வேண்டும்.
கொய்தல் நன்றென நினைத்துத் தாண்டு.
செய்யும் வினைக்குப் பலன் உண்டு.
உய்தலும் நலமாய் வந்திடும் நீண்டு.

பாரசீகக் கவிஞர் ஒமர் கய்யாமுக்குப்
பாராட்டுக் கிடைத்த ‘ரூபாய்யட்’ மொழிபெயர்ப்பு
ஃபிட்ஸ் ஜெரால்ட் ஆங்கிலக் கவிதையாக்கினார்
தேசிகவிநாயகம் பிள்ளை தமிழாக்கிய வரிகளிது.

தெளிந்த தமிழும் எழுத்துப் புலமையும்
அளித்த இறைவன் அளவற்ற அருளாளன்.
இளிவின்றி நாம் வாழ்தலெமது இசைவு.
ஒளிபெற்று உயர்தலும் எமது இணக்கம்.

மாண்டவனையுமெழுப்பும் அழகு ரூபம் மலர்கள்
மீண்டிடலாம் துன்பத்திலிருந்து மலர்கள் இரசனையில்.
தாண்டலாமோ எழுதிச் செல்லும் விதியினசைவை.
ஆண்டவனின் புன்னகை தான் மலர்களோ!

(இளிவு – இழிவு – இரண்டும் சரியானவைகள்)

25-4-2017

20. கண்ணகி-10. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – காதலில் கருக்கொண்ட காப்பியங்கள்.

 

nila-kannaki-10

*

காதலில் கருக்கொண்ட காப்பியங்கள்.

*

சிலம்பு + அதிகாரம் சித்தியடையாக் காவியம்
கலம்பகம், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
சலங்கையோசையில் கவனம் குலைந்த கோவலன்
அலங்கோலமாகிய துன்பியல் இன்பியல் காப்பியம்.

*

குண்டலகேசி, திருடன் காளன் காதலோவியம்.
கண்டதும் காதல் திருமணம், கணவன்
கண்டபடி திருட, கண்டிப்பு மனைவியால். 
கண்டித்தவளைக் கொல்ல எண்ணியவனைக் கொன்றாள்.
அண்டுமாசையே துன்பக் காரணியென்னும் காப்பியம்.

*

ஒருவரைக் காணாது ஒருவர் காதலித்த
இருவர் ‘ நளன் தமயந்தி ‘ துணைக்கதையாம்
வருவது மகாபாரதத்தில், அன்னத்தூது சிறப்புடைத்தாய்ப்
பெரும் துன்பப் படிப்பினைக் காப்பியம்.

*

அம்பை, சௌபல நாட்டு சால்வனின் 
செம்பாகக் காதலின் தோல்வியால், தேவவிரதனை
அம்புப் படுக்கையில் இட்டது பழிவாங்கல்.
தெம்புடை மகாபாரதத்தில் பல காதல்.

*

அரியாசனக் காதலால் சகுனியோடு இணைந்த
துரியோதனாதியரின் பதவிக் காதலால் ஒரு
உரிமைப் போரான காப்பியம் மகாபாரதம்.
உயிரை உருக்கி ஊக்குவிக்கும் காதற் 
பயிரின்றேல் ஓவியம், காவியம், காப்பியமேது!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 10-5-2018

*

love- 4

19. கண்ணகி-9. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- வீரம் விளைத்த தமிழ்.

 

 

nila-kannaki-9

*

வீரம் விளைத்த தமிழ்.

*

அச்சமில்லை இச்சகத்துள்ளோர் துச்சமாய் எண்ணினும்
உச்சிமீது வானிடிந்து உதிர்ந்தாலும் அச்சமில்லை
பச்சைப் பிள்ளையாய்த் தமிழில் வீரமூட்டும்
பாரதியார் பாடலைப் பள்ளியில் பாடினோம்

*

பயமெனும் பேய்தனையடித்து பொய்மையை அழித்தே
தமிழோடு வீரம் துளிர்த்தது பொய்யல்ல.
அமிழ்தான தமிழில் அன்றும் இன்றும் 
கமழ்ந்தூட்டுவது காதலுடன் மனதினுறுதியே.

*

தமிழ் மூவேந்தரும் இமயக் கூரையில்
முத்தமிழ் கொடிகளாம் வில், புலி, கயலை
தமிழுக்குத் தொண்டெடுத்து ஏற்றியது பெருமிதம்.
தமிழ் பெண்களின் வீரவுணர்வும் புறநானுறிலுண்டு.

*

முல்லை நிலத்தின் ஏறு தழுவுதல்
ஏறுகோள் என தொல்காப்பியம் வீரமென்கிறது.
புல்லுண்ட காளைகளை ஆயர்குல இளைஞர்
கொல்லேறு, மாக்காளையென்று தமிழால் போற்றினார்.

*

புலி வேட்டையில் வீரமறவரிடம் பலியான
புலி நகங்கள், பற்களும் மனைவிக்குப் பரிசானது
கோட் புலி, விறல் மிண்டர், 
வேங்கை மார்பன் பிள்ளைகளுக்கு வீரப்பெயராக்கினர்.

*

ஏட்டைப் பெண்கள் தொட்டால் தீமையல்ல
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டமாட்டோ மென்று
பட்டமாள சட்டமியற்ற பெண்கள் கிளம்ப
பாட்டிலே பாரதியும் பாடிக்காட்டியது வீரம்.

*

கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மனும் சீறிய
ஒப்பில்லாத் தமிழ் வீரத்தமிழ்
கண்ணகி, குயிலி வேலுநாச்சியார் உறவாடிய
வீரம் விளைத்த தமிழ் வாழ்க!

*

26-4-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

kaddapomman-devider

18.கண்ணகி-8. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)

 

 

nila-kannaki-8

*

தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.

*

( விறலோன்- வீரன், திண்ணியன்;)

உறவுகள் எதிரிகளாய் நிறம் மாறியது
அறமல்ல பாபமிது! அழிவதென் குலமே
பிறரல்ல! அறிவிழந்தேன் போரற்பமானது வேண்டாம்!
விறலோன் இரக்கம், குழப்பமிணைய நின்றான்.

*

மறுத்த காண்டீபனை மயங்கியவனை தருணத்தில்
உறுதியாக மண்ணும், மரமியற்கையும் நானேயென
சொன்னவன் கண்ணன் சொற்பழியும் எனக்கே
சொக்கட்டானாட்டுவோன் சொல்கிறேன் வில்லெடு! போர்தொடுவென்கிறார்

*

பந்தம் பாசம் பற்றை விடு!
அந்தம் வரை அதற்கப்பாலும் வருவது
சொந்த ஆன்மா, வந்த மேனியல்ல!
துணிந்திடு! தர்மம் தழைக்கும் காண்டீபமெடு!

*

தருணத்தில் விஐயன் கலக்கம் கீதோபதேசமாக
தத்துவஞானமாய், வேதசாரமாய்த் தகவுடன் மனதுள்ளாக
முத்தாக எண்ணி முனைந்தான் போரிட
கொத்தான கண்ணன் உபதேசத்தால் போரானது.

*

மனம் தூய்மையாக்கும் மதுரமொழி கீதை.
ஞானமாய் அண்டத்தினியல்பை, கடவுளின் செயலையுரைப்பது.
தானமாகத் தன்னுரையை வேதமாக்கியவன் கண்ணன்.
கனதியான மகாபாரதத்தில் அடங்கியது கீதை

*

காலமான இராசாசியின் கைவிளக்கு, காந்தியின் அநாசக்தியோகம்
பால கங்காதர திலகரின் கர்மயோகம்
காலங்கள் அனைத்திற்கும் ஏற்ற கீதையுரைகளே.
ஞாலத்து உயிர்களெனதே! எல்லாமும் நானேயென்பது கீதை.
*
(இராஜாசியின்- வடஎழுத்தென்பதால் அப்படி எழுதினேன்.)

*

 19-4-2018  Vetha Langathilakam   Denmark.

*

vision