81. பாமாலிகை (இயற்கை). 121. அருவியின் இசை

அருவியின் இசை

கொட்டும்; அருவியின் இசை
தட்டும் தாளமான விசை
எட்டுச் சுற்றும் ஓசை
கட்டு கவிப் பாட்டிசை

மலைப் பால் வடிவது
மலைத்திட வைக்கும் உறவிது
கலைத்திட்ட வெள்ளைக்காரி கூந்தலாக
மலையரசன் பட்டுச் சால்வையாக.

மானிட நாகரீக வாடை
மேனிலைக்கு வளர்த்த ஓடை
வனப்பெண் காற்சலங்கை நீர்வீழ்ச்சி
அலைச் சடுகுடு தெய்வீகம்.
2016

பள்ளம் மேடு தெரியாது
கள்ளம் ஏதும் இன்றி
துள்ளிப் பாய்ந்து வீழும்
துகிலா, பாலா நீலமா!

‘சோ’ வென்றா அன்றி
‘ஓ’ வென்று சலசலத்துக்
கொட்டும் இசை நாதமா!
முறுக்கேற்றி உருவேற்றும் கீதமா!

உன் அருவி இசையை
நான் மட்டுமா இரசிக்கிறேன்!
வண்ணத்துப்பூச்சியுடன் பறவைகளும்
திண்ணமாய் மரங்களும் பயிலுகின்றன.

உன்னைப் பார்க்கும் பரவசம்
என்ன வியப்பு இது!
எங்கிருந்து கொட்டுகிறாய்
மலைமங்கை புதையற்பொதி கிழிந்ததா!


2021

80. பாமாலிகை (இயற்கை) 120. இன்று பனி

இன்று பனி

பனி! பனி! பனி ! டென்மார்க்கில்
பனித்தூறல்! மனித மனங்களையும்
பனி கொரோனாப் பொழிவையும் கழுவட்டுமே!
தனி அழகு வெண் பூக்களுக்கு
பனித்தூறலில பூமி நனைந்து துளிர்க்குமோ!

மூல வனத்தின் ஆதி மௌனம்
காலமுகட்டின் பனி சூழ்
கோலமா! ததும்பும் வெண்பனி
மேலான வசீகரிப்பின் இன்பியல் துளிர்ப்பா
சூலான மழைக்கால முகிலின் ஆழ்மௌனம்.

பண்பாடும் பறவைச் சிறகுகள் அசைவு
வெண்மையைக் காண மலரும் மந்தகாசம்
கண்படுமனைத்தும் வெண்போர்வைப் பாறைகளாய்
செண்பகப் பறவைகள் வந்தமரக் காத்திருக்கின்றன
பண்பாக விரியக் மொட்டு மொழிகள்.

வெள்ளைப் பனிப்பொங்கல்
கொள்ளை அழகாய் இங்கு.
வெள்ளைத் தும்பு மிட்டாய்
அள்ளிக் கொட்டிய அழகு.
மப்பும் மந்தாரமும் வழமையான
மந்தல்(சோம்பல்) நாள் இந்நாள்.

6-1-2021

Tons of frost flowers overspread the iced lake surface