97. பா மாலிகை ( கதம்பம்) (589) தெளிந்த மனம்.

தெளிந்த மனம்.

தெளிந்த மனத்தில் தென்றல் வீசுது.
குளிர்ந்து உள்ளம் பளிங்காய் மின்னுது.
ஒளிர்ந்து உலகு பூங்காவாய்த் தெரியுது.
களிப்பு ஒன்றே நிறைந்து வழியுது.

நிறையக் கொடுத்து இல்லாமை அழித்து
குறையுடைய குழந்தைகளைப் பேணிக் காத்து
கறையில்லா வாழ்விற்குத் திருக்குறள் படிப்பித்து
நிறை வாழ்வு காணும் குறிக்கோளெனது.

எதற்காய் நான் பிறந்தேன் என்று
எவரும் எழுதி வைக்கவில்லை நன்று.
கவரும் தமிழால் காரியங்கள் வென்று
நகரட்டும் காலம் நாட்களைத் தின்று.

மனமெனும் மாளிகை மதியுடைய கோயிலானால்
தினமும் நாட்கள் திருவிழாத் தான்.
வனமெனும் பஞ்சமாபாதகங்கள் நெருங்காது.
தனமென்பது தெளிந்த மனமே பணமல்ல.

கோபம், பொறாமை, வஞ்சகம் ஆற்றாமையாம்
சாப குணங்கள் சாக்கடை போன்றவை.
தீபமாயொளிர தெளிந்த மனதைப் பாதுகாத்திடுங்கள்.
புரையற்ற பாலான மனதிலுபதேசங்கள் பதியும்.
13-8-18

13. பா மாலிகை ( காதல் -80) காதல் தாயத்து!

மார்கழி காற்று வெளியில் என் காதல் தாயத்து கவிதை….காற்றுவெளி – குழுவிற்கு நன்றிகள்

காதல் தாயத்து!

பொறுப்பிலிருந்து நழுவித் தொலைய
பொறுப்புடை மனிதர் விரும்பிடார்
பொறுமை அற்றவர் விலகுவார்.
பெறுமதியாம் இல்வாழ்வு பொதியல்ல
பொற்புடையதாய் ஆக்குதல் சுயகடன்.

பொன்னெனும் பேரன்பு காதல்
பொற்றாமரைக் குளம் அன்னங்களுலாவும்
பொன்மனம் அடுத்தவரை உதைக்காது
பொல்லாங்கு சொல்லி ஒதுக்காது.
பொய்யாக நடிக்காது மேலேற்றும்.

பேரன்பு என்பார், காதல்
பேய் என்பவரும், தனிப்பட்ட
பேசாத தேடலும் காதலே.
பேணும் பண்புடையது, தீராதது
பேதமற்ற பேரருள் காதல்.

கைபிடித்துக் கடைசி வரை
கையிணைப்பதை விட்டு ஓடாததே
வைரக்கல், வாழ்வினொளி, வைகையானால்
வைகறை! தாள் திறந்தணையுங்கள்!
வைபோகமாய்க் கொண்டாடினால் வைபவமே!

தாமரை நாயகன் வெப்பத்தில்
தாமரையாள் வெட்கித்துச் சிரிப்பாள் 
தாமரை மலர்களால் மூடி
தாமரை மலர்களை முகர்ந்து
தாகம் தீர்க்கும் தாயத்து காதலே!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் – 15-11-2018

96. பா மாலிகை ( கதம்பம்)(588) வேரோடு மரம் காக்கும் விழுதுகள்..

வேரோடு மரம் காக்கும் விழுதுகள்..

சீரோடு விழிகாக்கும் இமைகள்
வேரோடு மரம் காக்கும் விழுதுகள்
ஊரோடு மானம் காக்கும் பண்பாளர்கள்
பேரோடு புகழ்காக்கும் அரண்கள்.

பழுதில்லா விழுதுகள் பக்குவமான பற்றுக்கோடு.
விழுதுகளின விழுமம் வேருக்கொரு மேம்பாடு.
விழுதுகள் மரத்தினை வீறுடன் காக்கலாம்
அழுகிடும் தீமைகளையும் அறிவோடு தள்ளலாம்.

தூரோடு தீமையைத் துவம்சம் செய்யலாம்.
நேரோடு பேரோடு நெறியாக வாழலாம்
நெஞ்சோடு இவை நீவும் கோலங்கள்
நாரோடு பூ நழுவாத நிலைமைகள்

தேரோடு கயிறிழுக்கும் மன்பதை
ஊரோடு திரண்டு ஒத்துழைப்பு
நீரோடு பயிராகும் விதைகள்
சேறோடு உயிராகும் உயிர்ப்பு.

வேரோடிய சமூகசேவை விதைப்பில்
ஏரோடும் எழுதுகோலின் இணைப்பில்
வேரோடு மரம் காக்கும் முனைப்பில்
வீறான ஒரு விழுது நான்.

1-10-2002
(ரிஆர்ரி இலண்டன் ரைம் வானொலியில் ஒலி பரப்பானது.)

95. பா மாலிகை ( கதம்பம்) 587. பாரதியாய் வாழுங்கள்…

பாரதியாய் வாழுங்கள்…

காற்றி லேறியவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே ‘
ஏற்றியும் கூறினார் பாயுமொளி என்று
தூற்றித் திரியாது பெண்களும் இங்கு
நூற்றில் ஒருவராய் நுண்மதியாளர் என்று
சீற்றச் சிறுமதி காட்டாது வாழலாம்!

சாட்டை (தமிழ்) கொண்டு தீட்டியவன் பாரதி .
ஏட்டை ஏந்தியும் ஏறுமுகம் மாறுவதேன்!
ஈட்டிய அறிவேன் இடுகாடு ஏகுகிறது!
மாட்சியை மழிக்காது மலை ஏறுங்கள்!
நீட்சியாம் பண்பெனும் நீணிதி காத்து
ஆட்கொள்ளும் அன்பால் ஆட்சி புரியுங்கள்.

வெற்று வாழ்வு எமக்கு வேண்டாம்!
வெற்றி வாழ்வு வெளிச்சம் வேண்டும்!
போற்றி என்றும் புதுமைப் பெண்ணாய்
மாற்றியே வையகத்தை ஆற்றலுறச் செய்து
காற்றிலும் கண்ணியம் காப்பது கடமையாம்.
மேற்படச் செய்வோம் தோளிணைந்து உலகை!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்- 11-12-2018

9. பா மாலிகை (வாழ்த்துப்பா) 57. கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்.

கௌரி சிவபாலனுக்கு வாழ்த்துகள்

தமிழின் தாகம் தீராதது
அpழ்ந்து போகாதது உயிரழிந்தாலும்.
குமிழும் வண்ணப் பதிவுகள்
சிமிழாம் இதயத்தினூடு இறங்குகிறது
மண்ணில், ஓலையில், பாறையில்
எண்ணற்ற செப்புத் தகடுகளாகி
கண்கவரும் கடதாசியில் என்றாகி
வண்ணமாய்க் கணனியில் மின்னூலுமாகிறது.

கௌசி – சந்திரகௌரி சிவபாலனும்
கௌசல்யமாய்க் கருத்துப் பதிவுகளை
கௌரவமாய் நூலாக்கி வெளியிடுகிறார்
கௌவுதலாகட்டும் மக்கள் உள்ளத்தில்.
கட்டிய சிறுகதைக் கொத்தாய்
எட்டட்டும் கீர்த்தியின் உயரத்தை.
நீட்டுகிறேன் என் இனிய வாழ்த்துகளை

ஆய்வுகள் எடுத்துக்காட்டுகள் தேடி
ஆழ உருவாக்கி அமைத்து
முழு மாலையாக்கித் தரும்
வழுவற்ற முயற்சி கௌரியுடையது.
பழுதின்றிக் கலாச்சாரமும் காக்கப் படுகிறது.
கொழுத்தமறிவுச் செருக்கு புகழ் மயக்கமின்றி
விழுதுவிட்டு வளரட்டுமவர் வினைகள்
வாழிய பல்லாண்டு வளர்க புகழ்!

வேதா. இலங்காதிலகம் டென்மார்க். மார்கழி 2018    

94. பா மாலிகை ( கதம்பம்) கிண்கிணி நாதமல்ல… 586

கிண்கிணி நாதமல்ல…

கிண்கிணி நாதமல்ல கேட்ட அறிவிப்பு
தண்ணீரற்ற மென்னிக்குப் புயல் அறிவிப்பு
தண்ணீர்ப் பஞ்சமோ எனும் பிரமையில்
தண்ணீரில் கிருமிகளாம் ஓகுஸ் நகரில்
தண்ணீர் குழாய் திருகிய நீரின்
தண்ணெனும் குளிர்மையில் தாயக நீர்நிலை

நீரைக் கொதிக்க வைத்துப் பாவியுங்கள்
ஊரைக் கலக்கியது உதிர்ந்த தகவல்.
உலவிய வாழ்வில் கொள்ளை வசதி
தள்ளி நின்று ஆரோக்கியம் காக்கும் நிலை.
வெள்ளை மனசுடன் ஞாபக மறதியில்
அள்ளி ஏந்திய குழாய் நீரில்

கற்பனை விரிந்தது ஒரு கணத்தில்
கண்ணில் நெளிந்தது கிருமிகள் படை.
மின்னிய கற்பனையின் ஒரு நிலை
தண்ணீரில் கண்ணீரும் திகில் நிலை
எண்ணச் சுருள்களின் இறுகிய விடை
ஜென்மத்திலும் குழாய் நீரருந்தத் தடை

குற்றவியலுக்கு ஒரு சிறை வேண்டாம்
குடிநீரில் கிருமிகள் அறிவிப்புப் போதும்!
கும்மாளம் வடியும் மனம் குளம்பும்
குற்றம் கழிக்க நீர் தெளிப்பார்! நீரிலே 
குற்றமென்றால் யார் எதைத் தெளிப்பார்!
நீர் இருந்தும் இவ்வவதி நிலை!

நீரில்லா ஊரின் அனுபவம் எந்நிலை!
பாரில் பல மக்கள் படுமிப்
பரிதாப நிலை! அவல நிலை
கிண்கிணி நாதமல்ல கேட்ட அறிவிப்பு
தண்ணீரில் கிருமிகள் எங்கள் நகரில்
இரண்டாயிரத்திரண்டு ஆவணியின் அனுபவம் இது.

20-8-2002  

8. பா மாலிகை (வாழ்த்துப்பா)56. Langa B’day.

அகமகிழ்ந்து இனித்து வாழ்ந்திடு!


அனைத்தும் திரும்பிப் பார்க்கும் அழகு!
அருந்தவ வாழ்வு அன்பு நறுமணத்துடன்!
தினையளவு அல்ல பெருவாழ்வு இவ்வுலகம்
துனைவாக(விரைவாக) தவமாய் நடக்கிறது துணிந்து.
நினைவுகள் அனைத்தோடும் அன்பில் உன்னை
நனை! பேரொளியன்பில் இனியவுன் கூட்டினுள்.


தேனாமனுபவம் எடுக்க வண்ணத்திப் பூச்சிகள்
பனைத்துணை படையெடுத்து வரலாமில்லப் பூங்காவுள்.
புனைவுடன்(செழிப்புடன்) அனுவங்களை அள்ளித் தெளி!
மனையற வெற்றியை நேசவாசத்தை எடுத்துரை!
முனையளவும் மழுங்காது இன்பக் கதைகளை
வனைந்திடு பலருக்குப் பயன் தரும்!


வினைத் தூய்மையுடன் வானம் சிறகு
விரித்து வாழ்த்துக் கூற உன்
ஐனன தினம்! பிள்ளைகள் தேவ தேவதைகளாக
வெளிச்சப் பூக்களாமன்பு நுரைக்குமில்லத்தில் பிரியத்தின்
சிறகு விரித்து விசிறு! இந்நாளுமென்னாளும்
அகமகிழ்ந்து 78 வயதில் இனித்து வாழ்ந்திடு துணைவா!


வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 4-12-218

93. பா மாலிகை ( கதம்பம்) நான் .585.

நான்
நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது 
செத்தை தான் நானற்ற பதிலானது.

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

*

  பா ஆக்கம் பா வானதி    வேதா. இலங்காதிலகம்   டென்மார்க். 22-9-2015

92. பா மாலிகை ( கதம்பம்) போட்டி 584.

போட்டி

போட்டியில் பங்கெடுக்க மனபலம் தேவை
ஈட்டியெனும் தோல்வி மனதில் ஆழ்ந்து
தாட்டிகமாய் (வலிமை) காயம் தருவது உண்மை.
கேட்டினையும் சிலருக்கு. பலவிதமாய் விளைவிக்கும் 
ஆட்டம் விறுவிறுப்பாவதும் மிக உண்மை.

போட்டி, பந்தயம் என்றும் அழைப்போம்
கூட்டிடும் சுயவளர்ச்சியை என்பதும் திண்ணம்.
தேட்டம் கூட்டிடும் தன் செயற்பாட்டிற்கும்.
நீட்டிடும் வெற்றி தோல்விக்குப் பயிற்சியும்.
காட்டிடுமொரு பாதையை நல்ல வளர்ச்சிக்கும்.

நாட்டமாகும் முயற்சியுரம் வெற்றி வாசத்தில்.
மொட்டவிழ்ந்து வெற்றி மலர்கள் உதிரும்.
சூட்டி மகிழும் ஆக்கமுடை இதயம்.
வாட்டும் துன்பம் விலகும் புன்னகையில்.
மீட்டுமிராகங்கள் துணிவில் ஒளிரும் தீபங்கள்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் 16-7-2017  

11. நான் பெற்ற பட்டங்கள், 23வது பட்டம் – தமிழ் ஆர்வலர்

சங்கு இனம்.

(துல்லம் – பேரொலி.)

மெல்லுடலிகளினத்தில் ஓர் ஓட்டு உடலியாம்.
வல்லமை ஓடு வாழுமுயிரினத்தின் கூடாம்.
துல்லம் எழுப்பும் கடலுள்ளுதயம் சங்கினம்.
மெல்லிய மணற் பகுதி பாறையோரத்திலும்
நல்ல ஆழமாம் இருபது இருபத்தைந்தடியிலும்
துல்லியமாகக் கூட்டம் கூட்டமாய் வாழுமாம்.
இல்லமாக உயிர் வாழுமிடம் சங்குப்படுகையாம்.
கடல் அடியில் புழுக்களே உணவாகிறதாம்.

சங்கின் வலிய சுண்ணாம்பாலான ஓடு.
மங்காத இலட்சுமீகரம் மகிமையுடைய கூடு.
சங்கு ஊதுவதால் சுவாசம் சீராகுதலும்
ஓங்கும் நுரையீரற் செயற்பாட்டிற்கும் உதவும்.
பூசை வேளையிலும், நல்லவற்றின் வருகையறிவிக்கவும்
வெற்றியைப் பறைசாற்றவும், போர் ஆரம்பமெனவும்
மங்கல நிகழ்விற்கும் சங்கு முழக்கமுண்டு.
இந்துக்களின் காலகாலப் பழக்கம் இதுவாம்.

சங்கு வழிபாடு சங்கடங்கள் போக்கும்.
சங்கிலே தீர்த்தம் வார்க்கும் முறையும்
சங்கிலே குழந்தைக்கு மருந்தும் கொடுக்கிறார்கள்
உடலைப் பாதிக்கும் நுண்கிருமிகளை அழிப்பதால்.
சங்கிலே பிரதானம் இடம்புரி, வலம்புரி, 
திருகு சங்காம். வலம்புரியே வளம் நலமுடையது.
சங்கு முழங்கி மார்கழி திருவெம்பாவையில்
எங்கும் பக்தரை எழுப்புவது மார்கழிச்சங்கு.

சங்கிலே பலவகையாம் மணி சங்கு,
துவரி சங்கு, பாருத சங்கு, 
வைபவ சங்கு, பார் சங்கு, 
துயிலா சங்கு, வெண் சங்கு, 
பூமா சங்கு, திரி சங்குகளாம்.
தேவர்கள் அசுரர்கள் திருப்பாற்கடலைக் கடைந்தனராம்.
ஆங்கு பன்னிரண்டு பொருட்களைக் கண்டனராம்.
அவற்றில் ஒன்று வலம்புரிச்சங்காக வந்ததாம்.

இந்தியத்தமிழக , குயராத் கடற்கரை, அந்தமான்,
இலங்கை, தூத்துக்குடியில் சங்கு உற்பத்தியுண்டாம்.
பாரதப் போரிற்கு முன்னதாக இறைவனை
பஞ்சபாண்டவர் துதித்து சங்குகள் பெற்றனர்.
அருச்சுனன் தேவதத்தம், பீமன் பௌண்ட்ரம், 
தருமர் அனந்தவிசயம், நகுல சகாதேவன்
சுகோசம், மணிபுட்பகம் சங்குகளை பாவித்தனராம்.
பகவான் கிருட்னரின் சங்கு பாஞ்சசன்யம் 

தேவிமகாத்மியக் கதையில் கிருட்னர் மகன்
சுதர்மன் ராதையின் சாபத்தால் அசுரனாகச்
சங்கசூடன் பெயரில் பிறந்தான். வரமகிமையால்
தேவர்களைக் கொடுமைப் படுத்தியதால், சிவனார்
சூலாயுதத்தால் அவனை அழித்தார். சாம்பலாகிய 
அவன் எலும்புகள் கடலில் ஆழ்ந்து சங்காக
உருமாறியதாம். சங்கின் பிறப்பிற்கு இதுவும்
ஒரு கதையாக உலாவுகிறது.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 16-8-2018

நெல்லை ஏ.எஸ்.மணிமழலையின் தமிழ்

 Admin · 31August ·  என்னுயிரிணைக்கவி உறவுகளே, 

சோர்வு என்பது மனித இயல்பு.
மழலையும் அதற்கு விதி விலக்கல்ல.
அப்படி சோர்வில் மழலை தவித்த போது, 
கண்டம் விட்டு கண்டம் தாண்டி வசிப்பினும், தனது அன்புக் கரத்தால் மழலையை வருடிக் கொடுத்து , உற்சாகமூட்டிய , இந்த தன்னலமற்ற தமிழ்த்தாய்.கவி.வேதா இலங்காதிலகம் அவர்களை மழலை நன்றியுடன் வணங்குகிறது.

தமிழ் வாழ்க. . . வளர்க்க. . . நன்றி..