86. சான்றிதழ்கள் – கவிதைகள் – 96ஆசையா !கோபமா!

ஆசையா! கோபமா!

ஆசையா கோபமா நேசக் கண்மணி!
ஆசையுடன் தலைகோதல் இதமாக இல்லையா!
உன்னாசையைப் பூட்டி வைத்து மௌனமா!
என்னாசை நாயகி நீதானே அறிவாயே!
காதல் கிழத்தியே கோபம் விடு!

மோதல் வேண்டாம் தணிந்து விடு.
ஈதல் எடுத்தல் தானே காதல்
ஓதல் தேவையில்லை இணங்கி வா!
கண்ணுக்குள் கண்ணாய் என்னுக்குள் நீயானோம்.
எண்ணம் முழுதும் வேறு அல்ல.

வண்ண நிலாவாய், பூரண மதியாய்
விண்ணை முட்டும் அளவு நீயே!
கண்ணே சிரித்திடு! அனல் சூறாவளி
வெண்ணெயாய் உருகட்டும்! வெறுப்பு, தகிப்பு
மண் கவ்வட்டும்! உன்னோடு பேசாது

பண்ணும் இசை சேராது தனியாகிறது.
பால் கசந்திடுது படுக்கை நோகிறது.
நூலாய் நான் இளைக்க முன்னர்
வேல் எனும் மன்மதக் கணையையென்
மேல் எறிந்து குளிர்மை தா!

8-6-2017

85. சான்றிதழ்கள் – கவிதைகள் – 95 – மதமல்ல இது மனிதம்.

 மதமல்ல இது மனிதம்.

மதம் வேறானாலும் இதமுடைய மனிதம்.
கதமின்றிக் கந்தவேளும் இஸ்லாம் அக்பரும்
ததம் (அகலம்) அன்பென்று முத்திடும் நிலைமை.
நிதமனைவரும் நிசமாயிப்படி வாழ்தல் சொர்க்கம்.

கொலை, களவு, பொய் மதுவின்றி
வலையெனும் நீதிநெறி தருமம் உண்மையுள்
குலையாது மதமென்ன மார்க்கமென்னவென
நிலையூன்றுவது வேறுபாடற்ற ஒரு பாதையே!

சலாம், இசுலாம், சாந்தி, அமைதி.
படைத்த வல்லமை இறைக்குக் கட்டுப்படுதல்.
இந்துவானவர் கடவுளையிதயத்தால் நெருங்குவோர்
இறையையறிவார், நம்மாற் காணவியலாதவரெவரும்
கண்டதுமில்லையென்கிறது உபநிடதம்.

3-5-2017

84. சான்றிதழ்கள் – கவிதைகள் – 94 கூடு திறத்தல்.

 கூடு திறத்தல்.

மடை திறக்குது கருணையுணர்வு.
தடையற்ற இயற்கை பெருமளவு.
அடைத்து வைக்க இல்லையிசைவு.
குடையாய் சிறகு விரியுங்கள்.

பட்டணத்து நெருக்கடியில் பிள்ளைகளைக்
கட்டி வைப்பதுமொரு கூடே.
பட்டுச் சிறகு விரித்திட
கூட்டிச் செல்லுங்கள் கிராமத்திற்கு.

உடல் பருமனில் அசையவியலாதவள்
கடலெனும் யோகா பயிற்சியால்
சடசடவெனச் சிறகடித்து நடக்கிறாள்.
கூடானது ஊளைச் சதை.

காதலை நெஞ்சில் அடைத்தடைத்து
மோதும் உணர்வைத் தெரிவித்தால்
கூதலான இறுக்கம் ஒரு
கூடு திறத்தலான விடுதலை.

26-4-2017

83. சான்றிதழ்கள் – கவிதைகள் – 93நிர்மல நீரினால்

நிர்மல நீரினால்

சித்திரமே செண்பகமே சில்லெனும் நீர்
சிதறுதே முத்தாக உன் வதனத்தில்
சிலீரெனும் குளிர்மை உன்னைத் தங்கச்
சிலையாகக் காட்டும் ஒயிலழகு வண்ணமே.

வேகாத வெயிலிலே எட்டு மணித்தியாலம்
தீயாக வேலை, திருப்தியாக நீரினுள்
நீயொரு பதுமையடி நிர்மல நீரினால்
தீருமடி உன் அயர்வு திலகமே!

சந்தன முகத்திற்குப் பொட்டிட்டு ஓய்வெடு!
சமயம் பார்த்து உன்னிடம் வருவேன்!
சந்தம் சிந்தக் கவிதை பேசுவோம்!
சிறிது காதலும் சேர்த்துச் சரமாக்குவோம்!

8-6-2017

82. சான்றிதழ்கள் – கவிதைகள் – 92 – மரக்கிளையில் தூளி கட்டி

மரக்கிளையில் தூளி கட்டி

( மகமாயி ஈந்த – மகமாயீந்த. கைச்செட்டுக்காரி – சிக்கனமானவள்.
வீரபத்தினி . மறக்கற்புடையவள்.)

மரக்கிளையில் தூளி கட்டி
மரகதப்பச்சை நிழலில் தூளியாட்டி
மனத்தளத்தில் பாசத் தேரோட்டி
மகமாயீந்த இராசாங்க நிழலாடி
மகராசி மகனே கண்ணுறங்கு.

தீரமுடன் வாழும் சேரிக்காரி
பாரமுடை நெஞ்சத்தாள் பாசக்காரி.
காரமுடை சொல்லுக்காரி காவற்காரி.
கரிசனமாய் உழைக்கும் கைகாரியிவள்
தரமிறங்காது வாழ்வை யோட்டுகிறாள்.

கைக்கூலி வாங்கிக் கருணையோடு
கை கோர்த்த மச்சானோடு
தைரியமாய் வாழும் கைச்செட்டுக்காரி.
மைவிழியாள் மயக்கும் சாலக்காரி.
வைகையாயவள் வாழ்வு பெருகட்டும்.

வீராப்பாய்ப் பேசுவாள் வீராயி.
வீரபத்தினியாய் வரிகள் சொல்லி
வீரபத்திரனாய் மகனை வளர்ப்பாளாம்
வீசுதென்றலே நீயும் ஆராட்டு!
வீரமாயென் மருமகன் கண்ணுறங்க.

வலம்புரி முத்தே! வைரமே!
வல்லமையாள னாகு வாழ்விலே!
வாகை சூடி வறுமையை
வழித்தெடுத்து, வாழ் நிலையை
வளமாக்கு! வயிறார உணவு பெறு!

26-3-2017

81. சான்றிதழ்கள் – கவிதைகள் – 91கல்வித் தந்தை காமராசர்.

இந்த சான்றிதழ் கவிதையைப் பின் வரும் இணைப்பில் நீங்கள் வாசித்து மகிழலாம்.

https://kovaikkavi.wordpress.com/2016/07/18/27-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/

84. சான்றிதழ்கள் – கவிதைகள்துலாபாரம்

POEM

18-5-2017

எலுமிச்சம் பழத்தோலில் துலாபாரம் பிள்ளையாய்
இலுப்பைப் பூவை எடையிட்டது பசுமை.
உலுக்கும் நீதிகளின்று பணத்தின் விலையில்.
ஆயினும் போர்வையற்றது, கோணாதென்ற நம்பிக்கையில்

80. சான்றிதழ்கள் – கவிதைகள் – 90-கைகளுக்குள் சிக்காத காற்று

சந்திரோதயம்- கவிவனம் கவிதை
கைகளுக்குள் சிக்காத காற்று

கைகூட முடியாத எண்ணம்
கைகள் பிணையாத திருமணங்கள்
மைவிழிக்குள் அடங்காத ஆசை
கைவிலங்கு போடாத ஊற்று
கைகளுக்குள் சிக்காத காற்று.

குட்டிப் பேரன் குடுகுடுவென
குமிழி போல உருண்டோடி
குறும்பு செய்து அலைக்கழிக்கும்
குட்டிக் கண்ணன் எம்
கைகளுக்குள் சிக்காத காற்றே

எத்தனை ஆசைகள் மொழிந்தாலும்
மொத்தமாய் மரக்கட்டையாக இருந்து
சுத்தமான உணர்வுகளை அடக்கி
ஏனோ இப்படி நீ
கைகளுக்குள் சிக்காத காற்றே!

21-7-2018

79. சான்றிதழ்கள் – கவிதைகள் – 89-என் உயிர்த் தமிழ்

என் உயிர்த் தமிழ்

இதய வீணையின் உணர்வொலி,
விரல்களாற் குதிக்கும் தமிழ்ச்
சுரங்கள் தவிர உலகில்
வரமெனும் நிதர்சனம் எது!

தனிமையைக் கொல்லும் மந்திரம்
இனிய அறிவுப் பசி தீர்க்கும்
தனியே நான் வளைக்கும்
தனித்துவமான குறுமுனித் தமிழ்.

அவமானம் ஏமாற்றங்களை யொரு
தவமாகத் தியானிக்கும் பெரும்
நவநவ உத்திகள் காட்டும்
சிவம் ‘ ஓம் ‘ எனும் தமிழ்.

விதையுள் உறங்கும் உயிராய்
விருட்சத்தை உசுப்பும் மழையாய்
முகிழ்ந்து நன்னூல்களான தமிழ்
தவழ்ந்து ஊன்றுகிறது என்னுள்.

காசினியில் காலூன்றத் தீவிரமாய்
தேசுகவியெழுதிப் பெயர் பதிக்க
மகிழ்ந்து நாளும் அருந்துவதால்
அவிழ்ந்து பாவாய்ப் பூக்கிறது.

என்னைத் துன்புறுத்தாது தானாய்
உன்னி வழிந்து உலகுக்காய்
பின்னி உருவெடுக்கும் தமிழ்
இன்னலழிக்கிறது குளிர் நிலவாய்.

25-4-2018

77. 78. சான்றிதழ்கள் – கவிதைகள்-87

(  446. உன் கண்ணில் நீர் வழிந்தால்.)

இந்த இணைப்பில் வாசியுங்கள்.(87)

https://kovaikkavi.wordpress.com/2016/05/02/14872/

தங்க முத்திரை

78.        88. தாய்மை (சான்றிதழ்கள் – கவிதைகள்)

இந்த இணைப்பில் வாசியுங்கள்.

https://kovaikkavi.wordpress.com/2015/10/29/22-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/#comment-16298