1. திருக்குறள் கவிதைகள்

தாய்மைச் சந்ததித் தாய்வேர் என்பது
தாய்மைப் பேற்றுத் தவம் தானே

உலகில் இறையாய் உயர் தெய்வம்
உலவும் தாயாம் உணர்வது கடனே

1-7-2018

(குடும்பினி – மனைவி)

வாழ்க்கைத் துணை வாழ்வை உயர்த்தி
தாழ்விலா மதிப்புக் கூட்டும் உத்தமி.
வருவாய்க்கு ஏற்ற வரவு செலவை
கருவாய் எண்ணுவாள் கண்ணியத் துணைவி.
குடும்ப உறவை, குழந்தையைக் காக்கும்
குடும்பினி என்பவள் குடை போன்றவள்.
நியாயமுடன் யாகமாய் நினைத்துத் தன்னை
தியாகம் செய்பவள் திருவுடை மனைவி

3-7-2018

உற்ற காலத்து உதவிக்கு
உகந்ததாய் எதுவும் ஈடாகாது.
தமக்கு உதவுவோர் தன்மையை
தகவின்றி மறப்பார் தக்காரல்லர்.
சிறுதுளி உதவியும் பெறுமதியுடைத்து
அறுதியாய் மறப்பது உய்வற்றது.
தானமான உதவி வானளவானது
ஏனமற்றது தெய்வத்திற் கொப்பானவர்
தீனமற்ற உதவியாளர் ஈனமற்றவர்.

24-7-2018

அமிர்தம் -குறள் 67- மக்கட்பேறு

பிள்ளைக்குத் தந்தை வள்ளலாய்த் தருவதை
எள்ளளவும் சிந்தாது கொள்வது கடனே
தந்தை என்று தந்தார் இறைவன்
சிந்தை குளிர முந்திடு மகனே!
தருவதை முழுதாய் பெருக்கிடு பண்பாய்
பெருமையாய்ப் பெற்றவர் பெருமிதம் கொள்ளவே!
உதிரப் பிறப்பை முதிர வைக்கும்
கதிரவனாய்ச்; சுடரும் சதிரம் கல்வியே
படித்தவர் சபையினில் படிப்பாலே உயர
வடித்தார் தந்தை நடிப்பற்ற நன்றியே

-10-7-2018