46. பா மாலிகை ( காதல்) 113.

நறுமுகையே! குறுநகையே!

நறுமுகையே! குறுநகையே!

கண்ணான கண்ணே என்
கண்ணுக்குள் மணியே எம்
வண்ணக் காதலாண்டு நிறைவாய்
விண்ணெட்டுகிறது இரண்டாம் வருடம்

பண்ணிசை மனதில் ஆட
கிண்கிணி மணிகள் ஒலிக்க
கண்ணிறைந்த உன்னழகு காண
தண்ணிலவாய் நீ வருவாய்.

உன் நெருக்கம் மெதுவாக
என்னை நாட நாணிடும்
யன்னல் நிலவு விலகிடுமா!
மின்னல் ஒளி தருமா!

கண்கள் நிறைந்த காதல்
மண்ணிலே நிறைவாய் நிலைக்கட்டும்.
கிண்ணம் நிறைந்த கற்கண்டாய்
உண்மையாய் இதயத்தில் நிலைக்கட்டும்.

நறுமுகையே உன் செழிப்பான
குறுநகையில் மயில் தோகை
விரித்தாடும் என் மனம்
சிரித்தாடுவது உன்னால் அறிவாயா!

பின்னும் ஏக்கங்கள் இன்றி
மன்னன் நானும் மகாராணியாக
சின்ன மாளிகையில் நீயாகப்
பொன்னுலகு காண்போம் இவ்வுலகில்

வருடங்கள் நிறைப்பது அல்ல
வளமான வாழ்வு காண
வசதியான காலத்திற்காக அமைதியாய்
காத்திருப்போம் கலயாண மாலையிட

8-6-2020-

Mathiyuganathan Satgunanathan

விடா முயற்சி விஸ்வரூபம் வேதா

இவர் டென்மார்க்கில் நான் வாழ்த காலத்தில் ஒரே நகரத்தில் வசித்தோம் .
எங்கெல்லாம் இலக்கிய சந்திப்பு நடக்கிறதோ அங்கே இவரையும் காணலாம்
மிகவும் ஆர்வமான ஒரு இலக்கிய ஆர்வவர் , கவிஞர்.
இதற்கு அப்பால் நல்ல சமூக சிந்தனை உள்ளவர் .
அவர் கணவர் இலங்காதிலகம் நேர்த்தியான ஒரு நிர்வாகி
அவரும் நாங்களும் இணைந்து பல விழாக்களை நடத்தியிருக்கிறோம் .
அந்த நேரத்தில் எல்லாம் தானும் இணைந்து அரங்க அலங்காரம் வடிவமைப்பு போன்ற வற்றில் ஈடுபடுவார்
“மதி அது நேராக இல்லை இது சரியா இல்லை என்று மிகவும் ஆர்வாமாக விழா முடியும் வரை நிற்பார் .
பல கவியரங்குகளில் இணைந்திருக்கிறோம் .
இன்று வரை தன்னால் தொடர்ந்து எழுதி வரும் விடா முயற்சி விஸ்வரூபம்.
தமிழ் பாடசாலையில் ஆசியைரா பணி
இவருக்கு சிறு பிள்ளைகளை மிகவும் பிடிக்கும் .தானும் சிறு பிள்ளையாக மாறி விடுவார்.
இன்று தங்கள் இருவரின் நினைவலைகள் என்னுள் மிதந்தது.
இருவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்
May be an image of Vetha Langathilakam, eyeglasses and text that says ‘விடா முயற்சி விஸ்வரூபம் வேதா வாழும் போதே வாழ்த்துவோம்’

·

Vetha Langathilakam
Mathiyuganathan Satgunanathan முகநூலில் உமது அசைவுகளை இவருக்குக் கூறுவேன் இறுதியாக தங்கள் மகளின் நடனம் காட்டினேன். சங்கம் தூங்குகிறது. நடத்த உறுதியானவர்கள் இல்லை.
சங்கத்தைப் பொறுத்தவரை மனக் கவலையோடு உள்ளோம்.மிக்க நன்றி தங்கள் வரிகளுக்கு.உங்களை ஆண்டவன் ஆசீர்வதிக்கட்டும்.
May be an image of rose

45. பா மாலிகை ( காதல்)(112). கொலுசு நினைவோடு….

கொலுசு நினைவோடு….

மென்சிறகு வெண் பறவைகளின் துணையோடு
உன் பரிசாம் கொலுசு நினைவோடு
இன்கதை பேசுகிறேன் தனிமை அனலோடு
அன்னத்தைத் தூது விடலாமா உன்னிடமென்று.

இராட்சசனே! இரசனைகளை நினைக்க வைத்து
இரக்கமின்றி விலகினாயே இது நியாயமோ!
இரசிகனே உன்னை நினைந்துருகி உருகியே
என்னாடை இடையில் இருந்து நழுவுகிறதே.

விரகம் மேலிட வீணாகிறதே என்
வித்தையாம் அழகுக் கலை! இனியென்னை
விழலாக கவனிப்பது நிலைக்கண்ணடி தானோ!
வியப்பு! இதை நினைத்தேனா நடக்குமென்று!

பிரிய அன்புப் பரிமாறல் விலகிட
பருவ உணர்வுத் தழுவல் கனவாகிட
திருவே மயக்கும் உன்னழகு நினைவாகிட
உருகும் புலன் ஐந்தும் தாகமாகிறது.

ஏக்க வானில் நீல இரவு
தாக்கம் தருகிறது உன் பிரிவு.
ஊக்கமற்ற சோர்வு தூக்கம் கெடுக்கிறது.
ஊன்றுகோல் நீயருகிருந்த இன்ப நினைவுகளே!

29-5-2017

146. சான்றிதழ்கள் – கவிதைகள்143.

சங்கத் தமிழ் கவிதைப் பூங்கா.
கிராமியக் கவிதை தலைப்பு:-


நீர் வளத்தை மீட்டெடுப்போம்
0


ஆத்தாடி குளத்தடி தூர் எடுப்போம்
அண்ணாச்சியோடு வாங்க கை கொடுப்போம்.
எங்க வீட்டுக் கிணற்றிலே அப்பாவே
முங்கித் தூர் எடுப்பார் ஆத்தாடியோ (ஆத்தாடி)
0

தண்ணீரை இறைப்போம் உள்ளே சிரட்டை
தகரங்கள் குப்பையை வெளியெடுப்போம். நீரூற்று
அடைப்பை அகற்றுவோம். அருமை ஊற்று
ஆறாகப் பெருக வழி செய்வோம். (ஆத்தாடி)

0
மணல் கொள்ளையை நிறுத்தினால் அக்காச்சி
நிலத்தடி நீர்மட்டம் தாழாதன்றோ தாயி
நீர் சேமிப்புத் திறன் பெருகிடுமல்லோ.
ஓன்றாயமர்ந்து பேசித் தீர்வு உருவாக்குவோம். (ஆத்தாடி)

0

அருகு மாநிலங்கள் தராத உரிமையாம்
ஆற்று நீரைப் பெற போராடணும்.
ஏரி குளங்கள் அழியாது காத்திடணும்.
தொழிற்சாலைக் கழிவுகள் நீரிலிடத் தடையிடணும். (ஆத்தாடி)

0

பசுஞ்சாணி இலைகுழைகள் சேகரிப்போம் இயற்கைப்
பசளை பாவித்து வயல் செய்வோம்.
பாரு பார்வதி! மழையைச் சேமிப்போம்
பாக்கியம் தரும் செல்வத்தால் பாக்கியசாலிகளாவோம். (ஆத்தாடி)

30-1-2017


81. பாமாலிகை (இயற்கை)(121) ஆலம் விழுது

ஆலம் விழுது

துதிக்கையான ஆலம் விழுது
மேலிருந்து விழுவதால் விழுது
துதிக்கும் அன்னைக்குத் தூணாக
மதிப்பாய்ப் பண்பைக் காப்பவை.

ஆலம் விழுதாக வாரிசுகள்
காலம் முழுதும் கூரியராய் (புத்தி கூர்மையராய்)
ஆலமரத்திற்குக் கை கொடுப்பேனேன்று
கீலமின்றி (சிறுமை) உறவினைத் தாங்கிடுங்கள்

கோலம் போடும் என்
ஆலம் விழுதான ஆசைகள்
ஞாலம் போற்ற ஒழுக்க மரபோடு
சிலம் கொண்டு வளரட்டும்

3-3-2021