43. பா மாலிகை ( காதல்) 110 இங்கு இதுவும் காதல் தான்.

இங்கு இதுவும் காதல் தான்.

புனிதக் காதல் அத்தமிக்க
மனித வாழ்வு சில காணிக்கை.
சோலைவன வாழ்வு தர்ப்பணம்
பாலைவனமாக்க சுயநிர்ணயம்.
தியாகம் எனும் திருநாமத்தில்
யாகம் சிலர் சுயபாகம்.
எங்கும் காதலே இது பூமியில்.
தங்கிய காதலே இது என்றும்

நவீன புரட்சி மலர்ந்தது
அதீத எண்ணங்கள் விரிந்தது
பொருந்தா ஆடை களைவதாய்
பொருந்தும் ஆடை புனைவதாய்
‘ உணர்வுகளைக் கொல்லாதே ‘
‘ உணர்வுகளை உலவ விடு ‘
இது இவர்கள் காதல் வழி
இது இவர்கள் காதல் மொழி

மேற்கத்திய சித்தாந்தம் இது
நோக்கம் இவர்களுக்கு இது.
காதலுக்காக வளைந்த மனிதம்
மனிதனுக்காக வளைத்தான் காதலை
தாமிர, வெள்ளி விழாவும்
தங்கவிழாவும் சில கூட வரும்.
எங்கும் இதுவே காதலாக
இங்கு இதுவும் காதலாகும்.

ஓங்கும் காதல் தாராளமாக
ஏங்கும் இதயங்கள் ஏராளம்.
கட்டுப்பாடற்றது காதல் நதி
கட்டுக்குள் அடங்காத நதி
வெட்டிவிட இயலாத நதி
முட்டி மோதி நுரைக்கும்நதி
சட்டம் எதுவும் பண்ணாநதி
சரித்திரமும் படைக்கும் நதி.

7-2-2003
(இலண்டன் ரைம் வியாழன் கவிதை நேரம்)

74. Photo poem – கொடுப்பனவு வாழ்நிலை

கொடுப்பனவு வாழ்நிலை

துறவற்ற ஓவியத்திரை வானத்தில்
பறவைகளின் கொடுப்பனவு வாழ்நிலை
இறகினால் அசைக்கும் பயண ஓவியம்.
யார் தடுப்பாரிதை! சுதந்திர ஓவியம்!
தீர்ந்திடாத தூர்ந்திடாத இயற்கை, என்
நேர்ப்பாதைக் கவிதை போல.


மகிழ்ச்சியில் சுருளாது விரிந்து
துன்பத்தைச் சுருட்டி எறிந்து
நின்மல மேகத்தில் என்னுரிமையாம்
தமிழ் மேகத்தில் புகுதல்
மலை முகட்டிலிருந்து சொரியும் அருவியது
சுவடறியாக் கடலாவது போன்றது. கபடற்ற
உணர்வுச் சுகந்தமுடை கற்பகச்சோலையிது.

மேகக்குழந்தை தவழ்ந்து தவழ்ந்து
ஏகவெளியில் ஏகாந்தமாய் மலைத்தாயருகில் உறங்குகிறது
தாகம் தீர்க்கும் பூமியின் மரக்குழந்தைகள்
வேகமாக அழிக்கப்பட்டு செழுமை வறுமையாகிறது.
ஈகமாய் மனிதன் விழித்து
இயற்கையைக் காத்திடல் கடன்.


கவிமணி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 25-2-2020

73. Photo poem – மோனம்!…..

மோனம்!…..

வானத்தின் ஓயா இன்பமாய்
தானமாகும் நட்சத்திரப் பூக்கள்
ஆனந்தத்தில் மேலே., பூமியில்
மோனத்தில் கவிழ்ந்த பவளமல்லிகை
கானமிசைக்குது புலர்தலிலும் மலர்தலிலும்

00
கடல் அமைதியென்று கூறினால்
திடல் போல அலையுருள்வதும்
தடமிடும் ஆரவாரத்தின் கருத்தென்ன!
உடல் குமுற உள்ளே பொங்குவது
மடல் விரியும் அலையதன் திமிராகுமோ!

00
கடலுலகில் ஆவி துளியாகி
உடலோடு சிறகடித்துப் படபடக்கும்
வண்ணத்திப் பூச்சியோடு பலே ஆடுகிறது.
மனமும் கடலாகி எண்ணம் ஆவியாகிறது…
தமிழ்ச் சிறகெடுத்துப் பறக்கிறது…
00

23-2-2020

72. Photo poem – ஆடையானது

ஆடையானது

வளமான தமிழின் வாசனையை
வசமாக்கி வகையாக நிரவி
வயலாக விதைக்கிறேன் முளைத்திட.
அடையாளம் தெலைக்காத வரிகள்
தடையேதுமின்றி ஒரு துளியில்
இடைவெளியின்றித் துளிர்த்தன பூக்கள்.

கடை விரித்தன விழுதுகள்.
படையாக மண்ணில் ஊன்றின
குடைவிரித்த மழைமேகம் துளி சிந்தியது..
உடையாத குரலாய் இசையே சாரல்
ஓடையாகி நதியானது உயிரூட்டமாய்
ஆடையானது தமிழனின் மொழியாக.

28-1-2020

20. தொலைத்தவை எத்தனையோ – பம்பரம், தேர்

பம்பரம்

இக்காலத்தில் பம்பரம் என்றால் பல வகைகளில் வந்துள்ளன. நமது பேரர் கள் வித விதமாக விளையாடுகிறார்கள். பார்க்க ஆச்சரியமாக உள்ளன.
அன்றைய காலத்தில் சோடா மூடிகளுக்கு

நடுவில் துளையிட்டு ஈர்க்குக் குச்சியை நடுவில் சொருகிப் பம்பரமாக உருட்டுவோம்.

சோடா மூடியைச் சப்பட்டையாகத் தட்டியும் அப்படிச் செய்வோம். பம்பரம் உருளும் போது வண்ண மினு மினுக்கும் சொக்கலேட் கடதாசிகளை

நடுவில் ஈர்க்குச்சியில் சொருகி விட்டால் பம்பரம் உருளும் போது அழகாக மின்னும்.கிட்டத்தட்ட இப்படி இருக்கும்.

இன்னும் சோடா மூடியில் பல விளையாட்டுகள் செய்யலாம்.

இது தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி.

(இது வேறாகத் தனியானது பிளாஸ்டிக்கில் செய்வது )

தென்னை ஓலையில் செய்து விளையாடும் காத்தாடி. கீழே படத்தில் உள்ளபடி 5வது மாதிரி
கையில் பிடித்தபடி ஓடினால் காற்றுக்குச் சுழலும்.
படத்தில் உள்ளது போல

தென்னோலையில் செய்து விளையாடும் ஊது குழல்.


இது தவிர தென்னை மாத்தின் இளம் பிஞ்சுக் காய்களைக் குரும்பட்டி என்று கூறுவோம்.
இதன் மூடிகளைக் கழட்டி விட்டு

இதற்கும் நடுவில் ஈர்க்குக் குச்சியைச் சொருகி பம்பரமாக உருட்டுவோம். இதற்கும் வண்ண சொக்கலேட் கடதாசி உதவும்.

பம்பரம் தவிர இப்படிச் செய்து விளையாடுவோம். நடுவில் இலையையும் வைத்துத் தைப்பது போல பாவனை செய்வோம்.

இதை உருட்டும் சத்தம் தையல் மெசீன் தைப்பது போல, கேட்கும்.


தேர்

தேர் செய்வோம். 5 குரும்பட்டிகள் தேவை. ஈர்க்குக் குச்சிகளை இப்படிச் சொருகி தேர் செய்வது. ஊரில் உள்ள எனது நட்புகளைக் கேட்டேன். இப்படிச் செய்து

படம் அனுப்ப முடியுமா என்று. அனி விஐய் வவுனியாவில் இருந்து இதைச் செய்து அனுப்பினார். அவருக்கு மகள் இருக்கிறார் அவருடன் சேர்ந்து இதைச் செய்து படம் எடுத்து அனுப்பினார்.

இவருக்கு மனமார்ந்த நன்றி. இது ஒரு நல்ல பொழுதாக அவர்களுக்கு அமைந்திருக்கும்.

நாம் இதில் கயிறு கட்டி,தேராக இழுத்து பீப்பி நாதஸ்வரம் ஊதி ( அதுவும் பூவரசம் இலையில்) மேளம் தட்டி ஊர்வலம் போனோம்.
இதில் கூட்டுறவு- ஒற்றுமை – விட்டுக் கொடுப்பு என்று பல சங்கதிகள் பின்னியிருந்தன.

5. சிறுவர் பாடல்கள். – வானவில்

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.3)

வானவில்

வண்ணங்கள் விரிக்கும் வில்
எண்ணங்கள்பெருக்கும் வில்
பென்னம் பெரீ……ய வில்
அண்ணாந்து தரிசிக்கும்வில்.

வானத்திரையில் விழும் அது
‘ வானவில் ‘ எனும் வில்அது
வளைக்க நாண் இல்லா வில்.
வளைத்திட முடியாத வில்.

மழை – வெயில் இணைந்து
இழையும் காலநிலைக் கலவை
ஏழு வண்ணங்களின் ஆட்சி
நீளும் கற்பனைக்குச் சாட்சி

வாழும் காலத்தில் நினைக்க
நாளும் மனதில் பதிக்க’
ஏழு வண்ண முதலெழுத்து
குழுநிலைச் சொல் – Vibgyor

கத்தரி (violet )கருநீலம் (indigo )
நீலம் பச்சை மஞ்சள்
சிவந்த மஞ்சள்(orange) சிவப்பில்
உவந்த ஏழு நிறத்து வில்.

(26-7-2003 14-11-2003 குழந்தைகள் வானவில் தலைப்பில்
ETBC ஊடாகஇலண்டன் தமிழ் வானொலியில் வாசிக்கப்பட்டது)

4. சிறுவர் பாடல்கள். – பந்து

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.2)

பந்து

பந்து எந்தன் பந்து
பஞ்சு போன்ற பந்து
பாரமில்லாப் பந்து
பாப்பா சொந்தப் பந்து

பந்துகள் உருவம் வட்டம்
பந்துகளில் பல திட்டம்.
கைப் பந்து ஒன்று
காற் பந்தும் உண்டு

வலைப் பநது என்றும்
கூடைப் பந்தும் ஒன்று
ரென்னிஸ் பந்தும் உண்டு.
கிரிக்கெட் பந்தும் உண்டு
.

கொக்கிப் (hokey)பந்தும் ஒன்று
போலோ(polo) பந்தும் ஒன்று.
கொல்வ் (golf)பந்தும் உண்டு.
றகர் (rugger)பந்தும் உண்டு.

பூம்பந்து ஆட்டம்
நீர்ப் பந்து ஆட்டம்
டேபிள்(table tennis) ரென்னிஸ் பந்தென
பந்தின் சொந்தம் கேட்டீர்

ந்து பொந்தில் பதுங்காது
பந்து விளையாடி நான்
முந்தி வெற்றி பெற்றிட
உந்துகிறது என் மனம்.

(7-6-2003ல் கவிதை நேரத்தில் இலண்டன் ரைம் வானொலியில் வாசிக்கப் பட்டது)

3. சிறுவர் பாடல்கள். – வெள்ளை நிறம்.

(குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற என் இரண்டாவது நூலில்
இணைக்கப்பட்ட குழந்தைக் கவிதைகள்.1)

வெள்ளை நிறம்.

பால் வெள்ளை நிறம் பாப்பா – உந்தன்
பல்லும் வெள்ளை நிறம் பாப்பா
பஞ்சு வெண்மை நிறம் பாப்பா- உந்தன்
பஞ்சு மனதினைப் போலே

மல்லிகை மலர் உனக்குத் தெரியுமா?
மனது மயக்கும் வெள்ளை தானே!
முல்லை மலர் உனக்குத் தெரியுமா!
கொள்ளை அழகு வெள்ளை தானே!

கோழி முட்டை உனக்குத் தெரியுமா!
கொக்கு எனும் பறவை தெரியுமா!
எல்லாம் வெள்ளை நிறம் தானே!
செல்லக் குட்டி உன் மனசுபோலே

வெள்ளை நிறம் அமைதி நிறமாம்
வெள்ளைப் புறா சமாதானப் பறவையாம்
வெள்ளையில் அழுக்கு விழுந்தால்
வெளிச்சமாய்த் தெரிந்து போகும்.

பிள்ளை உன் வெள்ளை மனதிலே
புள்ளி அழுக்குப் பட விடாதே!.

(24-4-2000ல் ரிஆர்ரி இலண்டன் ரைம் வானொலியில் சகோதரர்கள் இசங்கீரன் இசையில் சுதா பாடினார்.
4-6-2002ல: ரிஆர்ரி கலைக் கதம்பத்தில் வானலையில் என்னால் வாசிக்கப்பட்டது.)

2. சிறுவர் பாடல்கள். – பம்பரம்.

பம்பரம்.

பம்பரம் பம்பரம் புதிய பம்பரம்
சுற்றி ஆடும் சுளன்று ஆடும் (பம்பரம்)

நூலைக் கம்பில் சுற்றுங்கோ சுற்றுங்கோ
நூலைக் கட்டையாய் சுற்றுங்கோ சுற்றுங்கோ (பம்பரம்)

பச்சை வளையம் கையால் அழுத்தி
நூலை இழுங்கோ நூலை இழுங்கோ
பம்பரம் சுற்றும் சற்றிச் சுற்றி
சுளரும் சுளரும் பம்பரம் சுற்றும் (பம்பரம்)

பாடல்:- வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 27-5-2015