128. சான்றிதழ்கள் – கவிதைகள் – 137.தொடுவானம்.

தொடுவானம்.

அடர் வானத்துடன் பூமி சந்திக்கும்
அத்து வானம் அல்லவோ தொடுவானம்!
தொடர் கோடெனச் சுடரும் அடிவானம்
தொட முடிவது போன்ற தோற்றம்!
தொடத் தொடப் போகும் தூரம்!
நட முடியாத ஆசைகளும் நடுவதாகக்
கிடந்து மாயத் தோற்றமிடும் தொடுவானம்
படர்ந்து தொடும் அசையாத நம்பிக்கை!

தொர்ந்து தொடர்ந்து ஒருநாள் தொடுவேன்!

18-6-2018

18. நான் பெற்ற பட்டங்கள் – தாலியும் தமிழும்

தாலியும் தமிழும்

உன்னைக் கண்டேன் கவிதையோடு பிணைந்தேனே
இன்னலின்றி அழகாகஇ அறிவாக நனைந்தேனே
கன்னல் சுவையாய்த் தாலியும் பெற்றேனே
கன்னலமுதாய் இரு மழலைகளும் கவிதையுடனே
பின்னலாகிக் கவினுறு தமிழ் செய்கிறேனே
பிரதிபலனின்று காதலீந்து உன்னைத் தொடர்ந்தேனே.

30-5-2019

29. பா மாலிகை ( காதல்) – 96.சிறகை விரித்தேன்——-சுகமாய் தூங்குகிறேன்

சிறகை விரித்தேன்——-சுகமாய் தூங்குகிறேன்

சிறகை விரித்தேன்…………பிறகு அமர்ந்தேன்
பறத்தல் மறந்தேன்…………தேவதை பக்கமுணர்ந்தேன்.
உறவு உணர்வின்………….. சுகம் நாடினேன்.
உள்ளம் தெளிந்தேன்………..சம்மதம் கேட்டேன்.
உன்னுதலின் வெளிச்சம் ……..விசிறும் நீரில்
உன்னதமாய் கண்டேன்………….உல்லாசமிது தான்.
கன்னச் சிவப்பின்……………… காரணமது தான்.
கண்களை கரங்களை…………….இதமாக இணைத்தேன்.
வேறென்ன வேண்டும்……………..இன்பம் நிறைந்தது.
மனம் நிறைந்தேன்…………………சுகமாய் தூங்குகிறேன்.

19-7-2016

28. பா மாலிகை ( காதல்)- 95. வெட்கம் சொன்ன காதல்

வெட்கம் சொன்ன காதல்

என் காதலை மொழியச் சென்றேன்.
ஏன் தயங்கி இங்கு நிற்கிறேன்!
என்னருகே நெருங்கினால் கைகள் தொடுவானோ!
என்ன தயக்கமிது! ஏன் முடியவில்லை!
என் காதலை யார் சொல்வது!

என்ன சொல்ல வருகிறதென் மனம்!
மின்னும் வெட்கம் சொன்ன காதல்
இது தானோ!

1-6-2018

வேறு:-

27.பா மாலிகை ( காதல்)- 94. காதலும் நிறமறியும்.

காதலும் நிறமறியும்.

காதலுக்கு நிறமா! பச்சை சிவப்பா!
காதலை உணரும் வகையிங்கு நிறமே
ஈதலான அன்பு இதம் இன்பமானது
காதலிவன் தருவது குளிர் கழியானது.

உன் பார்வையின் வீச்சு குளிர்
இன்னமுதத் தென்றலாய் என்னை அணைக்கும்
கன்னலாய் இனிக்கும் உன் பேச்சு
இன்னல் தீர்க்கும் அமுதமாம் உணர்வு.

முத்துக்கு நிகராம் தூய காதல்
உத்தம வெண்மை நிறம் என்பேன்.
சித்தமினிக்கும் சந்தமவன்! சங்கீதம் நான்!
அந்தமற்ற காதல் இன்னிசை நிறம்!

இச்சை உடல் மீது மட்டுமென்ற
பச்சைக் காமம் அப்பிய காதலாம்
கொச்சை எண்ண நிறங்களை தற்கால
அச்சமிகு சம்பவங்கள் அதி வெளிச்சமிடுகின்றது

நல்ல நிறக் காதல் காதலிக்கப்படட்டும்.
கொல்லும் தீ நிறக் காதலழியட்டும்.
மெல்லவியலாத கசப்பு நிறம் மாறி
வல்லமைக் காதலை ஆனந்த வண்ணமாக்குங்கள்.

5-7-2016

26. பா மாலிகை ( காதல்) – 93. காதல் வந்துவிட்டால்

காதல் வந்துவிட்டால்

அம்மா பத்துத் தரம் அழைக்கிறார்
இறுதியில் முதுகில் வந்து தட்டுகிறார்
எனக்குச் சுரணை வருகிறது. மனம்
முழுதும் என் காதலன் உருவே.
என்னங்க என்கிறேன். அம்மாவோ
அடியே நான் தானுன் அம்மா என்கிறாள்.
மன்னியுங்கள் ஏதோ நினைவு என்கிறேன்

காதல் வந்துவிட்டால்….இப்படியா!

மூன்றாம் மாடிக் குடியிருப்பாளி நான்.
தொழில் முடிந்து வீடு வருகிறேன்.
இரண்டாம் மாடிக் கதவை எனது
திறப்பால் திறக்க முயற்சிக்கிறேன்.

உள்ளிருந்து வீட்டுக்காரர் கதவு திறக்கிறார்
நான் திருதிருவென முழிக்கிறேன்.
மன்னியுங்கள் என்கிறேன்.
காதல் வந்தால் இந்தனை மறதியா!

சேலையை வெறுத்து ஒதுக்கினேன்.
நீண்ட கால்சட்டை அணிந்து சுற்றினேன்
அடிக்கடி இப்பொதெல்லாம் சேலையுடுக்கிறேன்.

கண்ணாடியில் அழகு பார்க்கிறேன்.
அம்மா ஆச்சரியமாய் பார்க்கிறாள்.
ஐய்யோ அம்மா நான் காதலில்
விழுந்துள்ளேன்: புரிந்து கொள்ளுங்களேன்.

எல்லாம் அழகாக இருக்கிறது
யார் ஏசினாலும் கோபம் வரவில்லை
உலகமே இனிக்கிறது.

சாமியை வெறுத்து நாத்திகம் பேசினேன்
அடிக்கடி இப்போது சாமி கும்பிடுகிறேன்.
அவரை எனக்குத் தா என்கிறேன்.

சேலை அணிந்து கோயிலுக்குப் போகிறேன்.
அவர் கோயிலுக்கு வருவாரா என்று
வழியை வழியைப் பார்க்கிறேன்.
அட! காதல் படுத்தும் பாடு அப்பப்பா!

5-7-2016

127. சான்றிதழ்கள் – கவிதைகள். – 136 மறந்து விடு மனசே

மறந்து விடு மனசே

மறந்து உன்னை விட்டுத் தனியே
துறந்து வாழ்தல் கடினம் அன்பே!
சிறந்து வாழ்வோம் என்றே எண்ணினேன்.
இறந்து விடு மனசே எனலாம்
மறந்து விடு மனசே என்கிறாய்!

மாலை நிலா நீ எனக்கு
ஆலைக் கரும்பு நீ எனக்கு
சோலைக் குளிர்ப் பேச்சினிலே தினம்
பாலை ஊற்றும் பாச வானம்
காலை மாலையாய் மகிழ்ந்தது பொய்யா!

கனதியே உன்னை மறக்கும் நிலை
மனதிலே கவி பொங்கி வழியுமே
தினமுன் நினைவு தீயாய்க் கனலுமே
அனலிலே மெழுகாய் மனம் உருகுமே
தனமென்று நினைத்த தவமேயிது தகுமா!

கற்றுக் கொள்கிறேன் உன்னை மறக்க
சுற்றும் காதல் மட்டுமல்ல உலகில்
பற்றுக் கொள்ளப் பலவுண்டு என்று
கற்பிக்கிறேன் என் ஆன்மாவிற்கு என்னை
அற்புதமாய் அலங்கரிக்க அனைத்தையும் ஏற்றிட

7-8-2018

126. சான்றிதழ்கள் – கவிதைகள். – பாரதி மீண்டும் பிறந்து வந்தால்….135

பாரதியார் பிறந்ததின சிறப்புக் கவிதைப் போட்டி
10-12-2017
(ஆரதி – ஆரத்தி- ஆலத்திப் பாட்டு)

பாரதி மீண்டும் பிறந்து வந்தால்….

வேரது ஆடுகிறது தமிழிற்கு ஏன்!
சீரது கொண்டு தானே படைத்திட்டேன்!
ஊரதிரும் கருத்துப் பிழைகளுடன்இ யாரும்
ஆரதிக்க வியலாத எழுத்துப் பிழைகளுடனும்
பேரதையழிக்கும் தமிழைத் தீரத்துடன் திருத்துவேனென்பான்.

மரத்தடி மகாநாடுகள்இ மாலை வகுப்புகளாக
மகிழ்ந்து சாரதியாவான் மறுபடி தமிழுக்கு!
மண்ணுக்கு நிகர் மொழியென மார்தட்டிஇ
மதுவாகத் தமிழை நேசி! அச்சமில்லையென
போதும் போதுமெனத் தமிழ் கொடுப்பான்.

போதைப் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து
மாதைப் பேணி மானம் காத்திட
பாதை தமிழென்று பலரையும் சேர்ப்பான்
கீதையுமோதிஇ போற்றி சிவசக்தியென்று துதிப்பான்
வாதை தொலைக்காட்சியென்று வயலிற்கு அழைப்பான்.

ஆணை அலட்சியம் செய்யும் பெண்ணுக்கு
பூணு நல்லறம் நாணமென்று மாற்றியே
ஆணின் விடுதலைக்கும் புதுப் பாட்டெடுப்பான்.
மாண்புடை பாலகர் எதிர்காலத் தூண்களென
மகிழ்ந்து பட்டமேற்றிக் கும்மியடிக்க வைப்பான்.

ஓயாதே ஓடி விளையாடு பாப்பாவென்று
ஓராயிரம் வீரக்கதைகள் கூறி தேசிய
உணர்வைத் தட்டியெழுப்புவான்! ஓயமாட்டான் பாரதி!

10-12-2017.

125. சான்றிதழ்கள் – கவிதைகள்- தரைக்கு வந்த தாரகையே! 134

தரைக்கு வந்த தாரகையே!

இரை தேடும் குருவியாக உதட்டை
நிரை செய்து ஒன்றாக்கி ஒரு
வரை செய்த அப்பிள் அழகும்
வண்டுக் கண்களும் என்னை இழுக்குதடி.

வானத்து நிலவு எதற்கடி கண்ணே!
வானவில் நீயே மறையாது இருந்திடடி!
புருவவில்லில் நான் புரியாது மயங்குகிறேன்
தருமே அந்தக் கன்னங்கள் தங்கத்தையடி.

கூந்தலழகில் முகில்கள் தோற்று ஓடும்
கூவியழைக்குது உன் குறும்பு முகமென்னை
கூவும் குருவியாக அபிநயிக்கும் உதடு
கூட்டுறவு சொல்லுதடி மானுட தேவையே!

மானுடச் சொர்க்கம் மழலை இன்பமடி
மாமுனியும் இளகுவான் மாண்பு மொழியில்
மாணிக்கம்இ முத்துஇ மரகதம் எதுவும்
மாநிலத்தில் ஈடு இல்லை மழலைக்கு.

மாதுளம் முத்தே! மாங்கனியே! மாநிலத்தில்
மாயமானாகவே சிலருக்கு மழலைச் செல்வமும்

18-6-2018

124 சான்றிதழ்கள் – கவிதைகள்- 133 – தாளில் வரையப்பட்ட ஒவியம்

தாளில் வரையப்பட்ட ஒவியம்

தங்கச் சிலையாயவள் தாராளமாய்
தாமரையிதயத்திலமர்ந்தாள்
தாளில் வரையப்பட்ட ஓவியமாய்.
தாகம் தீர்க்கிறாள் காவியமாய்.

காணுதலெனுமியக்கத்தாலன்பை நீவியும்
ஆசையைத் தூவியும் காதற்
பெருவலியைத் தாவியுமோடச் செய்யலாமிது
காதல் தத்துவம்.

23-4-2017