6. சோழா – (12) சோழாவும் யானையும்.

சோழாவும் யானையும்.

யானைப்பாகன் சோழாவாம் தாத்தி யானையாம்.
யானைச் சவாரி செய்வோம் வாங்கோ.
யானையில் அண்ணா ஏறினால் தம்பியும்
யானை எற வேண்டாமோ!..

பெண் யானை பிடி
ஆண் யானை களிறு
யானையின் சத்தம் பிளிறல்
எழுபது வருடம் வாழும்.

யானை முகம் பிள்ளையாருக்கு
யானை தாவர உண்ணி (வெஜிட்டேரியன்)
யானைத் தந்தம் விலை உயர்வு
யானைக் கை துதிக்கை

தாத்தி தாத்தி வழுக்குது.!.
எப்படிச் சாய்கிறேன் பாருங்கோ!
இறக்கி விடுங்கோ தாத்தி
இன்றைக்கு இது போதும்.

26-3-2020

78. Photo poem – சிறை

சிறை

கொரோணாச் சிறை
கொல்லுயிரி, நச்சுயிரியை
வெல்லத் திறவுகோல் தேவை!
வல்லமை ஆய்வுகள்தொடருது.

படரும் கிருமியைத் தடுக்க
இடைவெளி விட்டு நம்
தொடர்பாடல் தொடர
இடர் களைய ஒத்துழைப்போம்.

அரசனும் ஆண்டியும்
கரம் கொடுத்து நிற்காதது
பரமனுக்கும் புரியாததோ
தரமறியாப் போர் என்று.

குழந்தை வயோதிபர் என்று
வழங்காத பேதம், உடன்
புழங்குது கிருமிகள் உலகெங்கும்
புரியாது உயிரையும் எடுக்கிறது.

கவிநிலா வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 18-3-2020

76. Photo poem – கொரோனா-கோவிட் -19

கொரோனா-கோவிட் -19

கொரோனா, கிருமி நோய்
கருமபந்தமா! காலக்கோலமா!
விருப்போடு சுத்தம் பேணு!
கருத்தான உணவு உண்!

மூச்சை இழுத்து விடு!
ஓச்சும்(ஓட்டும்) பம்பரமாய் ஆடு!
நிச்சலனம், நிசப்தமாயாகட்டும் கோவிட்-19
கூச்சத்துடன் கூற்றுவன் ஓடட்டும்;!

வைராக்கியம் கொண்டு
தைரியம் வளர்! வன்மமாய்
வைரஸை ஒழிக்கக் கையிணைப்போம்!
கைவரிசைத் தாண்டவம் அழிப்போம்!

நித்தம் சோம்பலை ஒழி!
சித்தமாகு கிருமித் தடைக்கட்டிற்கு!

11-3-2020

75. photo poem – அன்பால் கோதுங்கள்!…

அன்பால் கோதுங்கள்!…

தொடர்பாடலால் மனம் தொடாது
தொய்தலற்ற இதயத் தொகுதி ஏன்!
தொட்டு இணைந்தாடித் தொடர்ந்தால்
தொடர்பும் இணைப்பும் இசையுமிழ்ந்து
தொங்கிடுமே மகிழ்வுத் தோரணங்கள்.

அன்பு, இணைப்பெனும் சொற்கள்
தன்னாலே உடைகிறது. இதைப்
பின்னல் பிணகின்றி இணைக்கலாமா!
வன்மைச் சுயநல உலகில்
என்றும் மௌனம் தான் சிறப்போ!

வாழ்த்து மடல் வழங்கினாலும்
வாயார நன்றிக் குமிழ்களின்றி
வாயடைத்த ஒரு வாடிக்கையாளராக
வாட்டமாகும் ஒரு வாசனையற்ற
வாழ்வு உறவு ஏன்!

நட்பு மழைக் குடைகள்
செட்டை விரித்தபடியே தான்
பட்டுத் தெறிக்கும் தூறல்கள்
கொட்டி ஈரமாக்கட்டும் இதயத்தை
பட்டான அன்பைச் சிறகாக்கிக் கோதுங்கள்.

9-3-2020