100. பா மாலிகை ( கதம்பம்)592. பண்பாடும் கலாச்சாரமும்

தமிழ் சேவை – காவியக் களஞ்சியம் – 64. கவிதைத் தலைப்பு
பண்பாடும் கலாச்சாரமும்

00

சொற் பொருள் விளக்கம் –
அண்ணித்த –பொருந்துதல்
வண்ணம் – வளப்பம் மாட்சிமை
மண்பாடு – பூமியிள் இயல்பு மொழி
மேட்டிமை – மேன்மை பதம் -சொல்
ஒண்மை – ஒழுங்கு.

00


பண்பாடு பழந்தமிழ் பதமாம் – கலாச்சாரம்
அண்ணித்த அருத்தமான வடமொழி (சமசுக்கிருத) வண்ணம்.
மண்பாடு இயற்கை மகத்துவப் பள்ளியால்
எண்ணம் நடவடிக்கையால் எருவான பழக்கவழக்கம்
பண்பட்டுக் கற்றறிந்த பயில்வோரின் இணைப்பு
தொன்றுதொட்டுச் சீராக்கித் தொட்டவுயர் நற்தன்மை – பண்பாடாம்.
00
ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி
மண்சார்ந்த கலப்பாக மேட்டிமை நிலைப்பாடு
உண்மையறிவு பஞ்சபூத உறவுக் கட்டமைப்பு
தூண்டும் இலக்கியமும் தொழில்சார் தெரிவுகளும்
உண்டி சமயம் உன்னத நடனமிசை
கொண்ட வீரம் கலைவழியாலுமான தனிப்பெருமை
00
அன்றைய பாரம்பரியம் அழியாதின்றும் நிலையுற்றது.
நன்றான மொழியான நல்விதையூன்றல் சிகரமேற்றும்.
என்றும் விழாக்களை ஏற்றி நடைமுறையாக்கல்
சின்னஞ்சிறார்களை அவ்வழி சீராய் நடத்துதல்
திருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்
பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை
00
மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்
ஏற்பென ஆடை உணவு மொழி
மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்
தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்
ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்
சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.
00
ஆலய வழிபாடு ஒன்றிணைந்த துதிப்பாடல்
இமாலயம் எட்டும் பண்பாட்டுப் பூசனை
கல்வியாலய நற்போதனையும் கருவானதாயகப் பிணைப்பும்
வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்
தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்
தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள்.
00
விருந்தோம்பல் – தீதும் நன்றும் பிறர்
தர வாரா – யாதும் ஊரே
யாவரும் கேளீர் – எம்பண்பாட்டுக் காலடிகள்.
கற்கோயில் கட்டிடக்கலைகள கனத்த அடையாளங்கள்.
அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.
தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம்.
00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 6-5-2022

——————————–

Admin

Vetha Langathilakam சொற் பொருள் விளக்கம் – எல்லாம் தேவையில்லை என கருதுகிறேன்.

நீங்கள் சொற் பொருள் விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டும் என்றில்லை.

கவிதையை மட்டுமே எழுதினால் போதுமானது,

ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி – இங்கே கூட்டணி என்று எதை சொல்கிறீர்கள்…?

ருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்

பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை- சிறப்பு கவிஞரே..

அருமை – ஒப்புக்கொள்கிறேன் நான்.,

மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்

ஏற்பென ஆடை உணவு மொழி //

மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்

தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்

ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்

சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.

– இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவை இது.

பிரார்த்தனை

ஆராதனை – சமஸ்கிருதம் கவனிக்க.

வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்

தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்

தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள். – நிச்சயமாய் வேண்டும்.

வழி மொழிகிறேன் கவிஞரே…

அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.

தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம் – அருமையான கூற்று… வழி மொழிகிறேன் கவிஞரே.

Vetha Langathilakam

செல்வா ஆறுமுகம் பண்பாட்டைத் தான கூட்டணி என்கிறேன். ஒற்றுமை. ஒண்மையுடையது ——— பிரார்த்தனை – துதிப்பாடல்

ஆராதனை – பூசனை

வடமொழி – சமசுகிருதம்… ஒற்றுமை. ஒண்மையுடையது ——— பிரார்த்தனை – துதிப்பாடல்

ஆராதனை – பூசனை

வடமொழி – சமசுகிருதம்

இந்த மூன்றையும் இப்படித் திருத்தலாமா? மிக்க நன்றி

9-4-2022

மிக்க நன்றி மகிழ்ச்சி .  அனை வருக்கும் 

வாழ்த்துகள்     (கவிஞர்கள் குழுவினருக்கு)

  • 12-5-2022

.அதியமான்

இனிய    வாழ்த்துகள்    கவியே….

12-5-2022

99. பா மாலிகை ( கதம்பம்)591. மரகதவிழா

மரகதவிழா 21-7-2022

பொன்விழா ஐம்பது ஆகி
இன்று மரகதவிழாவும் ஆகியது
எமரல்ட் ஆங்கிலம் பச்சை
என்ற பொருளான மரகதமாகிறது
மரகதம் அணிவதால் மனோபலமும்
உரமாகத் திட்டமிட்டு வினையாற்றும்
தரமான நினைவாற்றலும் மேன்மையாகும்.
மரகதம் நவரத்தினங்களில் தனிப்பட்டது.
மரகதம் வரை வாழவைத்ததற்குச்
சிரமேற் கரங்களுடன் நன்றி.
தரமுடை வாழ்விற்கு வெகுநன்றி.
பரம்பொருளே! நிறையாரோக்கியம் நல்குவாய்.!
மனமெல்லாம் நிறை திருப்தி
அனலாடியை மறக்காத மனம்
அனயமற்ற ( தீவினையற்ற) வாழ்வையருள்!
அனவரதமும் இறையைத் தொழுவேன்

வேதா.இலங்காதிலகம் -தென்மார்க்

98. பா மாலிகை ( கதம்பம்)590 மார்கழிப் பனி

எல்லோருக்கும் இனிய நத்தார் புது வருட வாழ்த்துகள்.

மார்கழிப் பனி

மரங்கள் பச்சையம் பார்த்ததுண்டு
மரங்கள் வெள்ளையாய்ப் பார்க்கிறோம்
வரங்கள் வெள்ளையாய் மழையுண்டு
வானமோ நிலமோ சமம் கண்டு
00
தேவலோகமோ இந்திர உலகமோவிது!
தேவருலா வரும் நேரமிதோ!
தேங்கிய பனி தருக்களிலேயிது
தேவசபையோவென வியக்க வைக்கிறது!!!
00
அழகோ அழகு இது!
அற்புதத் தரிசனம் இது
அண்டத்தில் அதிசய இயற்கையிது
விண்டிடவியலா மாண்பிது

00

பனிப்போர்வையுள் டென்மார்க்
நனி அழகிற்குப் பஞ்சமில்லை.
இனி வெளியுலா போனால்
சனிக் குளிர் கொல்லும்
00



வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 34-12-2021

97. பா மாலிகை ( கதம்பம்) (589) தெளிந்த மனம்.

தெளிந்த மனம்.

தெளிந்த மனத்தில் தென்றல் வீசுது.
குளிர்ந்து உள்ளம் பளிங்காய் மின்னுது.
ஒளிர்ந்து உலகு பூங்காவாய்த் தெரியுது.
களிப்பு ஒன்றே நிறைந்து வழியுது.

நிறையக் கொடுத்து இல்லாமை அழித்து
குறையுடைய குழந்தைகளைப் பேணிக் காத்து
கறையில்லா வாழ்விற்குத் திருக்குறள் படிப்பித்து
நிறை வாழ்வு காணும் குறிக்கோளெனது.

எதற்காய் நான் பிறந்தேன் என்று
எவரும் எழுதி வைக்கவில்லை நன்று.
கவரும் தமிழால் காரியங்கள் வென்று
நகரட்டும் காலம் நாட்களைத் தின்று.

மனமெனும் மாளிகை மதியுடைய கோயிலானால்
தினமும் நாட்கள் திருவிழாத் தான்.
வனமெனும் பஞ்சமாபாதகங்கள் நெருங்காது.
தனமென்பது தெளிந்த மனமே பணமல்ல.

கோபம், பொறாமை, வஞ்சகம் ஆற்றாமையாம்
சாப குணங்கள் சாக்கடை போன்றவை.
தீபமாயொளிர தெளிந்த மனதைப் பாதுகாத்திடுங்கள்.
புரையற்ற பாலான மனதிலுபதேசங்கள் பதியும்.
13-8-18

96. பா மாலிகை ( கதம்பம்)(588) வேரோடு மரம் காக்கும் விழுதுகள்..

வேரோடு மரம் காக்கும் விழுதுகள்..

சீரோடு விழிகாக்கும் இமைகள்
வேரோடு மரம் காக்கும் விழுதுகள்
ஊரோடு மானம் காக்கும் பண்பாளர்கள்
பேரோடு புகழ்காக்கும் அரண்கள்.

பழுதில்லா விழுதுகள் பக்குவமான பற்றுக்கோடு.
விழுதுகளின விழுமம் வேருக்கொரு மேம்பாடு.
விழுதுகள் மரத்தினை வீறுடன் காக்கலாம்
அழுகிடும் தீமைகளையும் அறிவோடு தள்ளலாம்.

தூரோடு தீமையைத் துவம்சம் செய்யலாம்.
நேரோடு பேரோடு நெறியாக வாழலாம்
நெஞ்சோடு இவை நீவும் கோலங்கள்
நாரோடு பூ நழுவாத நிலைமைகள்

தேரோடு கயிறிழுக்கும் மன்பதை
ஊரோடு திரண்டு ஒத்துழைப்பு
நீரோடு பயிராகும் விதைகள்
சேறோடு உயிராகும் உயிர்ப்பு.

வேரோடிய சமூகசேவை விதைப்பில்
ஏரோடும் எழுதுகோலின் இணைப்பில்
வேரோடு மரம் காக்கும் முனைப்பில்
வீறான ஒரு விழுது நான்.

1-10-2002
(ரிஆர்ரி இலண்டன் ரைம் வானொலியில் ஒலி பரப்பானது.)

95. பா மாலிகை ( கதம்பம்) 587. பாரதியாய் வாழுங்கள்…

பாரதியாய் வாழுங்கள்…

காற்றி லேறியவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே ‘
ஏற்றியும் கூறினார் பாயுமொளி என்று
தூற்றித் திரியாது பெண்களும் இங்கு
நூற்றில் ஒருவராய் நுண்மதியாளர் என்று
சீற்றச் சிறுமதி காட்டாது வாழலாம்!

சாட்டை (தமிழ்) கொண்டு தீட்டியவன் பாரதி .
ஏட்டை ஏந்தியும் ஏறுமுகம் மாறுவதேன்!
ஈட்டிய அறிவேன் இடுகாடு ஏகுகிறது!
மாட்சியை மழிக்காது மலை ஏறுங்கள்!
நீட்சியாம் பண்பெனும் நீணிதி காத்து
ஆட்கொள்ளும் அன்பால் ஆட்சி புரியுங்கள்.

வெற்று வாழ்வு எமக்கு வேண்டாம்!
வெற்றி வாழ்வு வெளிச்சம் வேண்டும்!
போற்றி என்றும் புதுமைப் பெண்ணாய்
மாற்றியே வையகத்தை ஆற்றலுறச் செய்து
காற்றிலும் கண்ணியம் காப்பது கடமையாம்.
மேற்படச் செய்வோம் தோளிணைந்து உலகை!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்- 11-12-2018

94. பா மாலிகை ( கதம்பம்) கிண்கிணி நாதமல்ல… 586

கிண்கிணி நாதமல்ல…

கிண்கிணி நாதமல்ல கேட்ட அறிவிப்பு
தண்ணீரற்ற மென்னிக்குப் புயல் அறிவிப்பு
தண்ணீர்ப் பஞ்சமோ எனும் பிரமையில்
தண்ணீரில் கிருமிகளாம் ஓகுஸ் நகரில்
தண்ணீர் குழாய் திருகிய நீரின்
தண்ணெனும் குளிர்மையில் தாயக நீர்நிலை

நீரைக் கொதிக்க வைத்துப் பாவியுங்கள்
ஊரைக் கலக்கியது உதிர்ந்த தகவல்.
உலவிய வாழ்வில் கொள்ளை வசதி
தள்ளி நின்று ஆரோக்கியம் காக்கும் நிலை.
வெள்ளை மனசுடன் ஞாபக மறதியில்
அள்ளி ஏந்திய குழாய் நீரில்

கற்பனை விரிந்தது ஒரு கணத்தில்
கண்ணில் நெளிந்தது கிருமிகள் படை.
மின்னிய கற்பனையின் ஒரு நிலை
தண்ணீரில் கண்ணீரும் திகில் நிலை
எண்ணச் சுருள்களின் இறுகிய விடை
ஜென்மத்திலும் குழாய் நீரருந்தத் தடை

குற்றவியலுக்கு ஒரு சிறை வேண்டாம்
குடிநீரில் கிருமிகள் அறிவிப்புப் போதும்!
கும்மாளம் வடியும் மனம் குளம்பும்
குற்றம் கழிக்க நீர் தெளிப்பார்! நீரிலே 
குற்றமென்றால் யார் எதைத் தெளிப்பார்!
நீர் இருந்தும் இவ்வவதி நிலை!

நீரில்லா ஊரின் அனுபவம் எந்நிலை!
பாரில் பல மக்கள் படுமிப்
பரிதாப நிலை! அவல நிலை
கிண்கிணி நாதமல்ல கேட்ட அறிவிப்பு
தண்ணீரில் கிருமிகள் எங்கள் நகரில்
இரண்டாயிரத்திரண்டு ஆவணியின் அனுபவம் இது.

20-8-2002  

93. பா மாலிகை ( கதம்பம்) நான் .585.

நான்
நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது 
செத்தை தான் நானற்ற பதிலானது.

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

*

  பா ஆக்கம் பா வானதி    வேதா. இலங்காதிலகம்   டென்மார்க். 22-9-2015

92. பா மாலிகை ( கதம்பம்) போட்டி 584.

போட்டி

போட்டியில் பங்கெடுக்க மனபலம் தேவை
ஈட்டியெனும் தோல்வி மனதில் ஆழ்ந்து
தாட்டிகமாய் (வலிமை) காயம் தருவது உண்மை.
கேட்டினையும் சிலருக்கு. பலவிதமாய் விளைவிக்கும் 
ஆட்டம் விறுவிறுப்பாவதும் மிக உண்மை.

போட்டி, பந்தயம் என்றும் அழைப்போம்
கூட்டிடும் சுயவளர்ச்சியை என்பதும் திண்ணம்.
தேட்டம் கூட்டிடும் தன் செயற்பாட்டிற்கும்.
நீட்டிடும் வெற்றி தோல்விக்குப் பயிற்சியும்.
காட்டிடுமொரு பாதையை நல்ல வளர்ச்சிக்கும்.

நாட்டமாகும் முயற்சியுரம் வெற்றி வாசத்தில்.
மொட்டவிழ்ந்து வெற்றி மலர்கள் உதிரும்.
சூட்டி மகிழும் ஆக்கமுடை இதயம்.
வாட்டும் துன்பம் விலகும் புன்னகையில்.
மீட்டுமிராகங்கள் துணிவில் ஒளிரும் தீபங்கள்.

பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் 16-7-2017