23. பா மாலிகை ( காதல்) -90.உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன்
உரிமையாய் பதில் சொல்!
என்னை பெண்மையை மதிப்பாயா!
சின்னச் சிணுங்கலும் இல்லாமல்
புன்னகை வாழ்வு தருவாயா!
அன்னம் உடைகள் தவிர
அன்பு வார்த்தைகளில் குளிப்பாட்டு!
அதையே நானுனக்குச் செய்வேன்.

21-12-2017

123. சான்றிதழ்கள் – கவிதைகள்- 132 – பனிப்பூக்கள்.

பனிப்பூக்கள்.

பஞ்சின் மென்மை உன் கன்னமாக
விஞ்சும் அழகால் உள்ளம் கனலாகுதே
அஞ்சும் மனமின்றி ஆசையாய்த் தொடுகிறேன்
கொஞ்சமும் பயமின்றி உன் அம்மா ஏசுவாரென்று

அன்னமே வருவாயா அழகுப் பனியில்
உன்னதமாய்ச் சறுக்கலாம் பனியால் எறியலாம்
சின்ன செடிகளின் தண்டுகளில் பனியும்
என்ன அழகாய் அப்பியுள்ளது பனிப்பூ

வெப்பத்தில் உருகிக் கண்ணாடியாய் மின்னும்
ஒப்பனையற்ற அழகு பிரம்மன் சிருட்டியாய்
கற்பனையிலும் காணவியலாது வெப்ப நாட்டினருக்கு
சிற்பம் செதுக்கியதாய் எத்தனை பனிப்பூக்கள்.

வானமே பூமிக்கு இறங்கியதாக பெரும்
தானமான கவின்கலைப் பனிப்பூக்கள் குளிரில்
தேனமுத அதரபானம் அருந்தி சூடேற்றும்
நாணமற்ற இணைகளிங்கு மூலைக்கு மூலை

20-4-2018

Tons of frost flowers overspread the iced lake surface

22. பா மாலிகை ( காதல்) – 89.காதலேந்தி வா!

காதலேந்தி வா!

ஆதன்மையற்ற, ஆதவமுடைய, ஆராதனைக்
காதலேந்திக் கனிவுடன் வா!
காதலித்தால் காட்டேறியும் தணிந்திடும்.
கூதலெனும் குளிருணர்வும் கூடிவிடும்.
சாதல் நினைவும் தள்ளிப் போகும்.
தீதல் மனமும் தணிந்துவிடும்
காதல் அத்தனை மகாசக்தி.
காதலித்துப் பார்த்தால் உலகில்
காதலற்றது எதுவுமில்லை என்றாகும்.
காதலேந்தி வா காதலிப்போம்.

(ஆதன்மை – பேதமை. ஆதவம் – ஒளி)

29-5-2018

10.பா மாலிகை (வாழ்த்துப்பா. 58)

இலங்காதிலகம் – வேதநாயகாம்பாள்.

திருமண பந்தத்தில் நாற்பத்தெட்டு ஆண்டுகள்!

ஒருமித்த நெடுந் தூரப் பயணம்! மலைகள்

அருவிகள், பள்ளங்கள் கையிணைத்த வயணம்.

அருச்சனைப் பூக்கள் தூவுகிறோம் நன்றியில்.

நிலவொளி இசையோடாடும் நடையாய் வாழ்வு

கலவுதல் கலகம் இல்லாத வாழ்வு.

கலசம் நிறை அமுதான நேசம்

கலங்கரை விளக்காதல் காலத்தின் வாசம்.

பற்பல ரசமாக இல்லறம் பிறருக்கும்

நற்பொருள் காட்டல், அவசியம்! அற்புதம்!

பொற்பத இறை நல்லாசி எம்

கற்கண்டு வாழ்வின் நல் இணைப்பு.

நற்குண நிறை துணை, அழகு

சிற்பமாய் அறிவுடை மக்கள், பேரர்

பொற்குவியலாய் நல்லாரோக்கியம், அமைதி

உற்சவமாக்கிய சிற்பரனுக்குக் கோடி நன்றி.

(சிற்பரன் – அறிவுக்கெட்டாத இறைவன்.வயணம் – நிலைமை.)

21-7-2015

வேறு

உயிரே உன்னைப் பிரியேன்.

ஊதுபத்தி வாசனையாய் உள்ளத்தில்
ஊடாடும் அன்பு வீடெங்கிலும்.
பேச்சின் இதத்தில் தென்றலாய்
ஓவ்வொரு சொற்களும் இதயத்தில்
பவழமல்லிகையாய் வீழ்ந்து
அழகு கொட்டுகிறது
அருத்தம் இனிக்கிறது

நாளும் நாணலாய் வளையும்
உன் பாணி மீண்டும்
கம்பீரமாய் நிமிர்ந்திருக்கு.
தந்திரம் என்பது பிறரால்
புரிந்திட முடியாத ஒன்று.
எனக்கு மட்டும் பழக்கமானது.

மௌனப் பன்னிர் தெளித்தே
என் தலையில் சூட்ட
மௌவல் மாலை கட்டுவாய்!

தமிழுக்குள் நானும் நீயும்
திராட்சை ரசப் போதையாகும்
பேசிக் கொண்டேயிருக்கும் ஆவல்!

பிள்ளைகளோடு பழகும் பாணியே தனி!
அப்பா சொன்னார்
அப்பா செய்வாரென்று உன்னை
உதாரணமாகக் கொள்ளும் நிலை
பெருமை கொண்டது எனக்கு.!
அப்பாக்கு பிள்ளைகள் தப்பாது
உள்ளனர் இனிது! இனிது!

அட்சயபாத்திரத்தினுள் அமுத மொழிகளாக
உன்னரிய சிந்தனைகள் சமூகத்திலும்
இன்னிசையூட்டுகிறது. இன்ப
மென்னதிர்வு தருகிறது. அங்கிள்
என்ன சொல்கிறீர்கள் என்று
ஆவல் கிளப்புகிறது.!

என்னுயிரே! நாற்பத்தொன்பது வருடங்கள்
நிறைவாக, மலர்கள் புன்னகையாலான
கப்பளிக்குளென்னைப் பொத்தி வைத்திருக்கிறாய்!
(இதற்கு முந்திய எழு வருடங்களுமாக!)
பிரிவென்ற பேச்சு எதற்கு!
அகராதியிலிருந்து அந்தச் சொல்லை
எடுத்த விடுவோம்!
இணைவே என்றும் இன்பம்!

10-7-2016.

24. photo poem

தகுதி

மலரின் வாசனை இயற்கை 
புலன் அறியாது மறைக்க முடியாது.

மலர் மலர்ந்தால் வாசனை.
மனிதன் பிறந்தால் திறமை.

தொகுதியாம் மரபணு மனிதனின்
தகுதி மாபெரும் அற்புதம்

உள்ளத்தில் நல்லது நிறைந்தால் 
பிறருக்குத் துன்பம் நேராது.
இது தான் வாழ்வின் சூத்திரம்.

25-6-2019

21. பா மாலிகை ( காதல்) -88.தூது போ தென்றலே

தூது போ தென்றலே

சாதுவாக நானிருக்க மாட்டேன் காதலுக்கு
ஏதுவான வழி ஒன்று தேடுவேன்.
ஊதுகுழல் ஊதினால் அவருக்குக் கேட்காது.
சேது அணை கட்டிப் பயணிக்க இயலாது.
தூது போ தென்றலே என்கிறேன்.

சென்று விடு எனக்காக என்
செந்தளிர் முகம் வாடியதே அவர்
செறிமை (நெருக்கம்) தூரமாகியதால் மனம் சோர்ந்து
செவ்வாழைக் கால்கள் நடை தளர்தலாகுதே
செம்பஞ்சுக் கன்னமும் வாடியதைக் கூறுவாய்.

வாசலைப் பார்த்தே வாழ்நாள் கழிகிறது
வாக்களித்தாரே வராத காரணம் கேட்டுவிடு
வாங்கியது அனைத்தும் திருப்பிட வரச்சொல்
வாட்டம் கண்டவர் நோயுற்றாயா என்கிறார்.
காட்டிக் கொடுக்குமுன்னே வரச்சொல்லு தென்றலே.

நித்திரை பறிபோனது மனதில் அவர்
சித்திரமே தினம் தோன்றும் காரணம்
விசித்திரமே, இடை மெலிந்ததைச் சொல்லிடு
பத்திரமாய் அவர் இருக்கிறாரா அறிந்திடு
முத்திரை மோதிரம் வேண்டாம் முத்தமிழரசியென்றிடு.

தமிழ்க் காதலியென்றிடு தமிழரசன் அறிவான்.
அமிர்தமான தென்றலே தூது போ எனக்காக..
சுகிர்தன் வரவால் சுகிர்தசாலி நானாவேன்.
பகிர்வோம் எம் நேசத்தை இடைவிடாது
மகிழ்வு தென்றலாகவே நெருங்கட்டும் எம்மை.

24-7-2018

121. 122. சான்றிதழ்கள் – கவிதைகள்130

பாவையெனில் நாட்டமெல்லாம் பரிகசிக்கக் கூடிவரும்
சேவையெனில் கூட்டமெல்லாம் சேர்ந்தணைய நாடிவரும்.
தீவையெனில் சேர்ந்தவரும் திரும்பாது ஓடவரும்
தேவையெனில் சொந்தமெல்லாம் தேடிவரும் கூடிவரும்.

27-3-2018

  1. 122. சான்றிதழ்கள் – கவிதைகள் 131

கனிவாய் வாழ்ந்திட கவனம் விரிக்கா
புனிதம் ஆழ்ந்திட்ட புலன்கள் பகையா!
இனிதாய் முனைந்து இசைந்து வராத
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா!

4.6-2018

27. கண்ணகி(14 )-மாமலை சபரியிலேமணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாநில மக்களுக்கு ஆசியிடும் அருள்தானம்.
பாதமிட பதினெட்டுப் படியுடைய புண்ணியதானம்
பதினெட்டு படிகளோ தங்கத்தகடாலான படிவம்.

பதினெட்டு மலைகளின் இடையிலான பக்திதானம்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை சந்நிதானம்.
பாவங்களழித்திட நாற்பத்தொரு நாட்கள் புண்ணியகாலம்
பிரமச்சாரி ஐயப்பனுக்கு இருமுடி தரிசனம்.

பாற்கடல் அமுதம் பகிர்ந்த மோகினியின்
ஆற்றல் நோக்கில் கவிழ்ந்தார் சிவன்.
தோற்றினார் ஐயப்பர் விட்டுணுவாம் மோகினியின்
வயிற்றிலொரு தேவ குழந்தைக் கருவாக.

மணிமுடி அரசர் பந்தள மகாராசா
மணிமுத்துப் பிள்ளை வரம் வேண்டினார்.
அணிசேர் பம்பாதீரத்தில் தெய்வக் குழந்தையாய்
மணிமாலை கழுத்துடைய பிள்ளையை வளர்த்தார்.

வளர்ப்பு மகனுக்கு முடி சூட்ட
வளர்த்த அரசி முரண் ஆகிட
வனைந்தாள் சூழ்ச்சி தனக்கொரு நோயென்று
வளப்பம் தருமாம் புலிப்பால் என்று.

எவரும் தேடவியலாப் புலிப்பாலுக்காய் எல்லாமறிந்தும்
எழுந்து காடேகினான். மகிசியாம் அரக்கியையும்
எதிர்த்துக் கொன்றான். புவிக்கு மணிகண்டன்
உதித்த காரணமும் நிறைவு பெற்றது.

புலிவாகனமாய் இந்திரன் மாற தேவர்கள்
புலிக் கூட்டமாக நாடேகினார் மணிகண்டன்.
கிலிகொண்ட இராணி உண்மையை யுரைத்தார்.
வலிவாம் தவமியற்ற ஐயப்பன் சபரிமலையேகினான்

14-6-2018

120.சான்றிதழ்கள் – கவிதைகள்- 129 -மனதோடு பேசுகிறேன்.

மனதோடு பேசுகிறேன்.

( உற்றறியும் – பயின்றறிதல்)

மனதோடு பேசுகிறேன் உனக்கது கேட்குமா!
உனக்கே உனக்காய் உயிரைத் தருகிறேன்.
எனக்கே எனக்காய் ஊர் சுற்றி
மனதிலினிய அனுபவங்களைச் சேர்க்க வா!

ன்றாகச் சுற்றி ஒற்றியெடுத்த நினைவுகள்
குன்றாது பெருக்கிட தயாராகு! போவோம்!
நன்றாகப் பார்த்த காட்சிகள் கவிதைகளாக
என்றும் பதுக்கி வைத்துள்ளேனது போதாது!

உன்னோடு சுற்றும் மரகத நினைவுகள்
என்றும் பல்லாக்கு ஊர்வலமே எனக்குள்.
சின்னப் பட்டத்தரசியாகி, ராசாவாக நீயும்
மின்னுமாசையில் உலாவும் தாக எறும்புகளென்னுள்.

சுற்றுலா இன்பம் எற்றுதலாக்க முடியாது!
இற்றுப் போகாத வாழ்விற்குக் குற்றாலமாகும்.
உற்றறியும் சிறந்த பன்முக அனுபவம்.
பற்று மிகவெனக்கு பறந்தனுபவிக்க வா!

11-2-2018