24. photo poem

தகுதி

மலரின் வாசனை இயற்கை 
புலன் அறியாது மறைக்க முடியாது.

மலர் மலர்ந்தால் வாசனை.
மனிதன் பிறந்தால் திறமை.

தொகுதியாம் மரபணு மனிதனின்
தகுதி மாபெரும் அற்புதம்

உள்ளத்தில் நல்லது நிறைந்தால் 
பிறருக்குத் துன்பம் நேராது.
இது தான் வாழ்வின் சூத்திரம்.

25-6-2019

Advertisements

21. பா மாலிகை ( காதல்) தூது போ தென்றலே

தூது போ தென்றலே

சாதுவாக நானிருக்க மாட்டேன் காதலுக்கு
ஏதுவான வழி ஒன்று தேடுவேன்.
ஊதுகுழல் ஊதினால் அவருக்குக் கேட்காது.
சேது அணை கட்டிப் பயணிக்க இயலாது.
தூது போ தென்றலே என்கிறேன்.

சென்று விடு எனக்காக என்
செந்தளிர் முகம் வாடியதே அவர்
செறிமை (நெருக்கம்) தூரமாகியதால் மனம் சோர்ந்து
செவ்வாழைக் கால்கள் நடை தளர்தலாகுதே
செம்பஞ்சுக் கன்னமும் வாடியதைக் கூறுவாய்.

வாசலைப் பார்த்தே வாழ்நாள் கழிகிறது
வாக்களித்தாரே வராத காரணம் கேட்டுவிடு
வாங்கியது அனைத்தும் திருப்பிட வரச்சொல்
வாட்டம் கண்டவர் நோயுற்றாயா என்கிறார்.
காட்டிக் கொடுக்குமுன்னே வரச்சொல்லு தென்றலே.

நித்திரை பறிபோனது மனதில் அவர்
சித்திரமே தினம் தோன்றும் காரணம்
விசித்திரமே, இடை மெலிந்ததைச் சொல்லிடு
பத்திரமாய் அவர் இருக்கிறாரா அறிந்திடு
முத்திரை மோதிரம் வேண்டாம் முத்தமிழரசியென்றிடு.

தமிழ்க் காதலியென்றிடு தமிழரசன் அறிவான்.
அமிர்தமான தென்றலே தூது போ எனக்காக..
சுகிர்தன் வரவால் சுகிர்தசாலி நானாவேன்.
பகிர்வோம் எம் நேசத்தை இடைவிடாது
மகிழ்வு தென்றலாகவே நெருங்கட்டும் எம்மை.

24-7-2018

123. 124. சான்றிதழ்கள் – கவிதைகள்

பாவையெனில் நாட்டமெல்லாம் பரிகசிக்கக் கூடிவரும்
சேவையெனில் கூட்டமெல்லாம் சேர்ந்தணைய நாடிவரும்.
தீவையெனில் சேர்ந்தவரும் திரும்பாது ஓடவரும்
தேவையெனில் சொந்தமெல்லாம் தேடிவரும் கூடிவரும்.

27-3-2018

24.

  1. 124. சான்றிதழ்கள் – கவிதைகள்

கனிவாய் வாழ்ந்திட கவனம் விரிக்கா
புனிதம் ஆழ்ந்திட்ட புலன்கள் பகையா!
இனிதாய் முனைந்து இசைந்து வராத
மனிதம் மரித்தால் வசந்தம் வருமா!

4.6-2018

27. கண்ணகி(14 )-மாமலை சபரியிலேமணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்.

மாமலை சபரியிலே மணிகண்டன் சந்நிதானம்
மாநில மக்களுக்கு ஆசியிடும் அருள்தானம்.
பாதமிட பதினெட்டுப் படியுடைய புண்ணியதானம்
பதினெட்டு படிகளோ தங்கத்தகடாலான படிவம்.

பதினெட்டு மலைகளின் இடையிலான பக்திதானம்
பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை சந்நிதானம்.
பாவங்களழித்திட நாற்பத்தொரு நாட்கள் புண்ணியகாலம்
பிரமச்சாரி ஐயப்பனுக்கு இருமுடி தரிசனம்.

பாற்கடல் அமுதம் பகிர்ந்த மோகினியின்
ஆற்றல் நோக்கில் கவிழ்ந்தார் சிவன்.
தோற்றினார் ஐயப்பர் விட்டுணுவாம் மோகினியின்
வயிற்றிலொரு தேவ குழந்தைக் கருவாக.

மணிமுடி அரசர் பந்தள மகாராசா
மணிமுத்துப் பிள்ளை வரம் வேண்டினார்.
அணிசேர் பம்பாதீரத்தில் தெய்வக் குழந்தையாய்
மணிமாலை கழுத்துடைய பிள்ளையை வளர்த்தார்.

வளர்ப்பு மகனுக்கு முடி சூட்ட
வளர்த்த அரசி முரண் ஆகிட
வனைந்தாள் சூழ்ச்சி தனக்கொரு நோயென்று
வளப்பம் தருமாம் புலிப்பால் என்று.

எவரும் தேடவியலாப் புலிப்பாலுக்காய் எல்லாமறிந்தும்
எழுந்து காடேகினான். மகிசியாம் அரக்கியையும்
எதிர்த்துக் கொன்றான். புவிக்கு மணிகண்டன்
உதித்த காரணமும் நிறைவு பெற்றது.

புலிவாகனமாய் இந்திரன் மாற தேவர்கள்
புலிக் கூட்டமாக நாடேகினார் மணிகண்டன்.
கிலிகொண்ட இராணி உண்மையை யுரைத்தார்.
வலிவாம் தவமியற்ற ஐயப்பன் சபரிமலையேகினான்

14-6-2018

122.சான்றிதழ்கள் – கவிதைகள்- மனதோடு பேசுகிறேன்.

மனதோடு பேசுகிறேன்.

( உற்றறியும் – பயின்றறிதல்)

மனதோடு பேசுகிறேன் உனக்கது கேட்குமா!
உனக்கே உனக்காய் உயிரைத் தருகிறேன்.
எனக்கே எனக்காய் ஊர் சுற்றி
மனதிலினிய அனுபவங்களைச் சேர்க்க வா!

ன்றாகச் சுற்றி ஒற்றியெடுத்த நினைவுகள்
குன்றாது பெருக்கிட தயாராகு! போவோம்!
நன்றாகப் பார்த்த காட்சிகள் கவிதைகளாக
என்றும் பதுக்கி வைத்துள்ளேனது போதாது!

உன்னோடு சுற்றும் மரகத நினைவுகள்
என்றும் பல்லாக்கு ஊர்வலமே எனக்குள்.
சின்னப் பட்டத்தரசியாகி, ராசாவாக நீயும்
மின்னுமாசையில் உலாவும் தாக எறும்புகளென்னுள்.

சுற்றுலா இன்பம் எற்றுதலாக்க முடியாது!
இற்றுப் போகாத வாழ்விற்குக் குற்றாலமாகும்.
உற்றறியும் சிறந்த பன்முக அனுபவம்.
பற்று மிகவெனக்கு பறந்தனுபவிக்க வா!

11-2-2018

121.சான்றிதழ்கள் – கவிதைகள்- மனமே மாறி விடு.

மனமே மாறி விடு.

என்றும் கலவர எண்ணங்களை மாற்றி
நன்றான குணங்கள் பெருக்கி வெற்றி
என்ற பாதையிலேக மனதை வெளுப்போம்.
தன்னம்பிக்கைச் சுவாசம் உள்ளிழுத்துத் துணிவாய்
நன்னம்பிக்கை முனை தேடிச் செல்வோம்.

சின்ன வயதிலே ஒழுக்கவியல் கற்று
சீர்மிகு நன்னெறி, ஒளவை மொழிகள்,
நேர்மையாம் குறள் மொழிகளைக் கற்றால்
வன்மையற்ற பாதையிலடியெடுக்க மனம் மாறிடும்.
முன்னேறி எட்டாக்கனியெனும் சாதனை எட்டலாம்.

திடமான மனம் எதையும் தாங்கும்.
அடம் பிடிக்காதது அமைதி மனம்.
இடம் கொடுத்தால் என்றும் நம்மால்
தடமெனும் காயங்களை அன்பினால் மாற்றலாம்.
திடமோடு போராடு ! மனமே மாறிடும்!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு உன்
தனமே அதுவாக மனம் மாறிடும்.
வனமும் பூங்காவும் நமது மனமே.
இனத்தோடு அன்பு செய்யுங்கள் அதற்கு
மனமே நீ மாறி விடு.

17-5-2017

120. சான்றிதழ்கள் – கவிதைகள்-தமிழ் வளருகிறது.

தமிழ் வளர்கிறதா? தேய்கிறதா?

தமிழ் வளருகிறது.


(நறுமை –நன்மை. தழல் -நெருப்பு. அட்டி -தடை)

குமிழ் குமிழாக உலகெங்கும்
தமிழ் எழுகிறது நூல்களாக.
தழலாக முகநூலிலும், நதியோரநாணல்களிலும்
சுழல் கதிராகப் போட்டிகள்.

புலம் பெயர் தமிழர்
வலம் வந்தார் உலகெங்கும்.
பலம் தமிழுக்கென்று வானொலிகளும்
குலமுயர தொலைகாட்சிகளும் உயர்ந்தன.

குறுமுனித் தமி ழ் , தீந்தமிழ்,
வறுமையற்ற தொல்காப்பியத் தமிழ்
வெறுமையழியும் விரும்பி வளர்க்கிறோம்
நறுமை! குமரிக்கண்டத் திமிரிது!

வாய்மொழி, வரைமொழி, கற்சாசனமாகி
பாய் விரிக்கிறது கணனிமொழியாக.
ஆய்விலுலகில் பதினெட்டாம் நிலையாக
தாய், வேர், எம்முயிரிது.

இலக்குடைய கலங்கரை விளக்கிது.
மலட்டாறு அல்ல மானம்.
அலட்டாமலதுவாய் வெற்றியுடன் வளருது.
புலவராகிறார் பலர் புவியில்.

முச்சங்கம் வளர்த்துயர்ந்து இன்று
மூலைக்கொரு சங்கம் மொழியை
முயன்று விதைக்கிறது. உள்ளங்கையில்
மூத்த நூல்கள் பொக்கிசமாய்.

பட்டிமன்றங்கள், கவியரங்கம் பேச்சரங்கம்
அட்டியின்றி அனைத்து இடமும்.
கெட்டித்தனமாய் மாணவச் சிறார்
முட்டி மோதுகிறார் மேடையேற.

பாரதி, கம்பன், ஒளவைகள்
ஊரதிர தமிழில் உருவாகிறார்.
பாரதிர நோக்காடின்றி வளருகிறார்.
மீகாமனாகட்டும் மொழிச் செங்கோல்.

7-3-18

26. கண்ணகி(13 )-

மன்னன் தசரதன் மருமகள்கள்.

(சனபதி-அரசன்)

சனகன் செல்விகள் சீதா, ஊர்மிளை
சனகன் தம்பியின் சுருதகீர்த்தி, மாண்டவி,
சனபதி தசரதனின் சக்தியுடை மருமகள்கள்.
இனப் பெருமை காத்து இனிதாய் வாழ்ந்தனர்.

யாசித்தான் சத்ருக்னன் யோகச் சிவதனுசுகாண
யோசித்தது சுருதகீர்த்தியைச் சந்திக்க என்று!
நேசிப்பால் கேலி நாசுக்காகக் செய்தனர்…
மாசில்லாக் காதலிரகசிய மாயம் அது!

அவதானம் தம்மிணைகளை அணுகலாமோ என்று,
தேவதைகள் தசரதன் பாதபூசைக்காய் வந்தனர்
தாவிடும் ஆசை தாபமாய் கண்களில்
தாபம் தீர்ந்து திரும்பினர் அரண்மனைக்கு.

மாண்டவி பரதனிணை, மூத்தவள் குசத்வசனுக்கு.
மாசறு புச்(ஸ்)கலன், தக்சனை பெற்றெடுத்தாள்.
மனதார பரதனுடன் பாதுகையை வணங்கி
மாநதியில் ஓடும் சருகாக வாழ்ந்தாள்.

சுருதகீர்த்தி சத்ருக்னனிணை, சகோதரி மாண்டவிக்கு.
சந்திரசேது, அங்கதன் சந்ததியான மகன்கள்.
இராமராச்சியத்துடன் மதுராபுரியை இணைத்து முடிசூடிய
இராணியாக சத்ருக்னனுக்குக்கை யிணைத்துச் சிறந்தாள்.

இலட்சுமணன் ஏற்று இணங்கிய தியாகப்பணி
இலட்சணமாக நடக்க தன்னை வெறுத்து
இலட்சுமணன் ஒதுங்கும் இயல்புச்சூழல் உருவாக்கி
இலட்சணமாய்த் தன்துயர் ஆழப்புதைத்தாள் ஊர்மிளை.

பதினான்கு ஆண்டுகள் ஊன் உறக்கமின்றி
பக்குவமாய் அரண்மனைக்குள் அஞ்ஞாத வாசத்தை
பத்தினியாய்க்; கணவனுக்காய் பகிர்ந்த துணை
பரமதியாகி ஆகினாள் தசரதனின் மருமக்களுள்.

மருமகள் சீதாபுராணம் இராமாயணமாகுமே!

7-6-2018

25. கண்ணகி(12)-

தோழியர் குறும்பில் சொக்கிடும் தலைவியர்…

குறும்பு வில்லெடுக்க விரும்பும் தோழியர்
கரும்பு அம்பைக் காலகாலமாய்த் தலைவிக்கெய்வார்
பெருகும் வம்பு, விரும்பும் கிண்டல்
அரும்பி மலரும் அதிகளிப்புச் சேட்டை.

அரசகுமாரி தடாதகைப்பிராட்டியார் அழகு நந்தவனத்தில்
பரவசமாய் ஊஞ்சலில் பாங்கியரோடு ஆடுகிறார்.
உரசிய பட்டாடை ஊடி விலகியபாதத்தில்
அரவிந்தமாய்ச் சிவந்த ஆழத்தழும்பு கண்ணுற்றனர்.

” கிட்டேவாடி! தோழியிதைப் காணேன்!” அழைத்தனர்.
வட்டமாய்க் கூடி வகையாய்க் கிண்டலடித்தனர்.
கிட்டிய சிற்றூடலில் என்னுயிர்த் தலைவன்
ஒட்டியுறவாட ஊடல் ஒழிக்க எண்ணினான்.

கூனற்பிறையுடன் பாதத்தில் குனிந்து தலைவைக்க
கூர்பிறை குத்திய காயமென்றார், நாணிச்சிவந்தார்.
கூறியது அந்தரங்கம்! தோழியர் குறும்பிலே சொக்கினார்.
சேடியோடி வந்து தலைவி தலைதடவியாற்றினாளாம்.

கண்ணகி கைப்பற்றிய கோவலன் தீயை
வண்ணமுடன் வலம் வந்;து வணங்கியதும்
அண்ணித்தனர் தளிர்மேனி அழகு மங்கையர்.
விண்ணதிர மலரேந்தி விசிறியகுறும்பால் கலகலத்தார்.

கண்ணும், நாணத்தால் கன்னமும் சிவந்தன.
பெண்ணிலை மயக்கும் பூவாம்குறும்பு விசமம்.
பண்ணோடும் காதலுணர்வு பாவுதலாக மயங்கினாளரசி
பண்போடு காமமரவணைக்கப் பாயும் கொல்லெனும்சிரிப்பு

இழிவற்ற படைப்பு இலக்கணத்தின் அவசியத்திற்காய்
அழியாத காதல் அரவணைப்பிற்காய் உயிர்கள்
எழிலான மேனியேங்கும் எகிறும்பருவ தாகத்திற்காய்
எத்தனை சொக்கிடும் மாயக் குறும்புகள்.!!!!!!!

31-5-2018