29. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.- அன்பிற்கும் உண்டோ

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

(அன்றுதல் – சினத்தல். அன்றினார் – பகைவர்)

கன்னித்தமிழ் போல் கொடுத்தலும் எடுத்தலும்
கன்னலன்பிற்கு முடியும், குனிதலென்பதே யில்லா
குன்றி மணியன்பும் குன்றளவு பயனுடைத்து.
தன்னடக்கம் நிறையன்புச் செயற்பாடு, தன்னலமற்றது.

மன்பதையை மன்றத்தில் பெருமையாக்கும் நட்பாம்
பொன்னுக்கு நிகராமன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ்!
அன்பற்றோருக்கு ஐம்புலன்களாலும் பயன் இல
என்புதோல் போர்த்திய தென்பவர் வள்ளுவர்.

இன்பித்தல் நட்பினால் நேசமுடன் பெருகிடும்.
அன்பான இன்சொல் நற் பழமே
ஒன்று கூடுதலும் அன்பான நிகழ்வே!
ஒன்றாமை நோய் அன்பின்மையால் பெருகும்.

அன்றுதல், அடம், அகங்காரம், துரோகம்
அன்பினை அடைக்கும் தாழ் காண்!
அன்பினால் உலகை ஆளலாம் கேள்!
அன்பில்லாதோன் சுயநல அவகுணம் நிறைந்தோன்.

அன்றினாரையும் இணைக்க அன்பால் முடியும்.
வன்மையற்ற நேசிப்பு இன்னலற்ற தெய்வீகம்!
துன்பம் அழிப்பது இன்னமுத அன்பே
அன்பினாலான இன்சொல்லும் பெரும் தர்மமே

உன்மத்தம் உடையவன் குறை அன்பின்மை.
மேன்மை உயர்ச்சி பாசத்தால் நிறையும்.
மென் தலைகோதும் உணர்வும் அன்பாலிணைவதே
அன்பூர மனமிளகும் எறும்பூரக் கற்குழிதலாய்.

4-6-2018

28. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன்.- நின்னையே ரதியென்று

நின்னையே ரதியென்று நினைத்தேனடி

நின்னையே ரதியென்று நினைத்தேனடி
அன்னையை நிகர்த்த உன்னையே
என்னவளாக எண்ணி உருகுகிறேன்.
பொன்னையே ஒத்த கணங்கள்
உன்னையருகில் கொண்ட மணித்துளிகள்.

மென்னகை ஒரு வேதமென்றால்
மென்னடை ஒரு அன்னமாகும்.
மென்மையாம் உன் மேனியும்
புன்னகை வதனமும் ஒரு
நன்கொடை எனக்கு அறிவாய்.

விண்ணின் ரதியன்று நீயென்
மண்ணின் ரதியடி மூங்கிலிசைப்
பண்ணின் தேவராகச் சாரலடி
எண்ணத்தில் நீ உயர்
வண்ணத் தமிழுக்கு நிகரடி.

என் வாழ்வின் மதியே
தேன் அனைய நதியே
வான் ஒத்த மதியே
என்னை உயர்த்தும் நிதியே
கன்னம் சிவக்குதேன் ரதியே!

மன்மதன் நானாவேன் உனக்கு
முன்னவனுக்கு நன்றி கூறுகிறேன்.
மன்னுயிர்களுக்கு உதாரணமாய் இருப்போம்
முன்னோடியாக வாழ்ந்து காட்டுவோம்
அன்பில் தேடலை இதிகாசமாக்குவோம்.

1-6-2018

27. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். வீறு கொள் பெண்ணே!..

 

kaviju-parathy-10

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 10

*

வீறு கொள் பெண்ணே!..

*

ஆறு போன்ற உன்னோட்டம் தடுப்பார்
ஊறு செய்யவே சிலர் காத்திருப்பார்
ஏறு போல் வந்து பொருதுவார்
வீறு கொள் பெண்ணே துணிந்திடு!

*

வன்புணர்வு பாலியல் கொடுமைகளை அறிந்து
என்றுமே மௌனமாகாதே! ரௌத்திரம் பழகு!
தன்னம்பிக்கையை ஊன்றுகோலாய் எடு! உண்மையில்
உன் மையினால் பிழைகளைத் திருத்தியெழுது!

*

பெண்மையொரு மகாசக்தி அறிந்திடு! மனவயலில்
திண்மைப் புது எண்ணங்களைத் தூவு!
உன் மௌனம் நிர்வாணம்! தொன்மைக்காலமல்லவிது!
நுண்மையான அறிவாயுதம் ஏந்தி முன்னேறு.

*

பாரில் பல மங்கையர் போராடினார்
போரில் மன்னன் ஆற்காடு நவாப்பை
வீரியமாய்த் தென்னிந்திய சுதந்திர போராட்டத்தில்
தைரியமாய்ப் புறங்காணச் செய்தார் வேலுநாச்சியார்.

*

பாரதத்தின் முதற் பெண் வீராங்கனையின்
பாசக்கணவர் வெள்ளையரால் கொல்லப்பட்டார் தயங்காது
வேசமின்றி வெகுசனப் புரட்சியால் வென்றார்.
வேங்கையாவோம் வீறுகொள்வோம் வேலுநாச்சியார் போன்று!

*

23-4-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

*

veeramankai

 

26. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். யாரிடமோ இவள் மனம்!……

 

 

kaviju-parathy-9

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 9

*

யாரிடமோ இவள் மனம்!……

*

நிறம் கொஞ்சும் இரவிவர்மன் ஓவியமாய்
நினைவிருக்கும் வரை அரங்கேறும் காவியம்.
பிரபஞ்ச அழிவிலும் பிரிவற்ற காதல்
சுரம் கொஞ்சும் இராகமாலிகைப் பொழில்.
தரமுடை நினைவுத் தேனின் தேனடைகள்,
உரமான நினைவாற்றலில் நீந்தும் கனவுகள்.

*

நித்திலக் காதல் நிலவு வெளிச்சங்கள்
புத்தக மயிலிறகாய்ப் பொத்திய எண்ணங்கள்
சத்தான கனதியற்ற கற்பனை நினைவுகள்.
பூவிடும் மகரந்தப் பூந்துகள்கள், பூவாணங்கள்,
காவிடும் பூம்பல்லக்குகள், கனகரதங்களாய்,
நீவிடும் வாழ்வை நீண்டினிய பயணத்திற்கு,

*

இசையும் சுரப்பிகளின் இனிய மென்னகை
அசைத்து நனைக்கிறது உயிர் நதியை.
கிளுகிளுக்கும் இன்பத்தில் நெஞ்சம் கிறங்கி
தளதளக்கும் நேசத்தில் தனிசக்தி பிறந்து
குளுகுளுக்கும் பிருந்தாவன நீரூற்றாகும் இன்பத்தில்
கிசுகிசுக்கும் உயர் காதல் சிறகுகளாகிறதிங்கு

*

இவள் மனம் யாரிடமோ சங்கமம்.
இனிதான பெரும் ஊற்றாமன்புச் சாரலில்
இன்பத் திருவூற்றாம் விழிமொழியின் ஆதரவில்
ஊன் பாகமாயுயிரில் கலந்து இனித்து
தேன் பாகாய் உயிரில் உணர்கிறாளோ!
ஒன்றான உயிரின் தாளமிணையக் காத்திருக்கிறாளோ!

*

20-4-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

butterfly- 3

25. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். மேவிய காவிரியே தாவி வருவாயா!..

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 8

kaviju-parathy-8

*

மேவிய காவிரியே தாவி வருவாயா!..

*

பூவிரிக்கும் கூட்டுறவு பூரணமாய் மனதில்
ஓவியமாய் மக்களிடம் ஒன்றாக இணைந்தால்
மேவிய காவிரியே தாவி வருவாள்
வாவிகள் வழிந்தோட வளம் தருவாள்

*

‘ கருநாடகத்தில் உடையட்டுமுன் கால்விலங்கு
காவிரியாய் நீ நடந்து காதுகளில்
தேன் வழங்கு ‘ என்கிறார் கவிஞர்.மு.மேத்தா
இன்றல்ல அன்றும் தான் நீர்சிக்கல்.

*

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 
நான்காயிரத்து நானூறடி உயரத்திலுதித்தாள்
தங்கத்தாதின் காத்திரமான பங்கு விகிதம்
கனதியால் பெயர்க் காரணம் பொன்னியாறு.

*

கா என்றால் பூங்காவாக செல்லுமிடமெல்லாம்
கா விரிப்பதாலும் காவிரி ஆகினாள்.
வண்ணம் பாடி வரமான காவிரியின்று
வறுமையாய் வளமின்றி வரண்டு வாடுகிறது.

*

எல்லைகள் ஏதுமற்ற எழிலான காவிரிக்கு
எல்லை வகுப்பவர் ஆறறிவு மானுடரே
புல்லரால் வரட்சி பன்னிரு மாவட்டங்களின்
பசுமை ஏக்கர் இருபத்தாறு இலட்சம்.

*

தண்ணீரை கர்நாடகம் தரமறுக்கும் பார்வை
கண்ணியமற்ற ஆற்று மணலள்ளும் கயமை
திண்டாடுகிறது காவேரி மண் நீரின்றி
கண்டு வாடுது ஏழைவிவசாயி நெஞ்சு.

*

 9-3-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

alai..or..

24. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். என்னுள் மலரும் நினைவா நீ!

 

kaviju-parathy-7

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 7

என்னுள் மலரும் நினைவா நீ!

*

என்னுள் மலரும் நினைவு நீ
நீலவானக் கதிரின் மஞ்சள்
கோல எழிலுக்காய் உள்ளம்.
அலைகள் பொங்கும் நுரையுள்
வலம் வரும் குதிரையின் கம்பீர
உலாவாய் உணர்வுகள் சொடுக்கி
உயிர் பிழியமாட்டானா!

*

உன் தூரம் நீண்ட பாலைவனமாய்,
என்னுள் இரகசியமாய்ச் சபிக்கிறேன்.
மழைச்சாரலில் நனைந்த மல்லிகையாய்க்
குழையும் தனிமையும், குளிரும்
கவிந்து வியாபித்துப் போர்த்துகிறது
இதயம் பிளக்கும் இரகசிய இரணமாய்….
என்னுள் மலரும் நினைவா நீ

*

வசந்தம் குடிகொள்ளும் அறையுள்
விடியலின்றி உறவு, கருமைப்
பொடி தூவிய இருட்டாக.
நொடிப் பொழுதும் மனம்
துடித்த போர்வையை விலக்கிய
துடிக்கும் உணர்வுக்கான ஏக்கம்.
என்னுள் மலரும் நினைவு நீ

*

5-4-2018   வேதா. இலங்காதிலகம்.. டென்மார்க். 

*

one line

23. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.)

 

 

kaviju-parathy-6

*

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்-6

*

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

*

உயிரெழுத்து மெய்யோடு ஊடாடி 
உயிர்மெய்யாய்ப் புணர்ந்து மொழியின்
உயிர் நாணாகிச் செங்கோலோச்சுகிறது.
தாய்மொழியே கலாச்சார வேர்மொழி.
மொழியும் மரபுமொன்றாய்ப் பிணைந்தும்
மொழியழியின் மரபழியும் விதியாம்.

*

கலாச்சாரத்தில் வாழ்வுச் சாரமிணைப்பு.
மூலாதாரப் பழைமை உதாரணங்கள்
சீலாச்சாரத் தாய்மொழிக் கொல்லையின்
மூதாதையர் அடிச்சுவட்டில் தொடர்கிறது.
புத்தகவனங்களில் வழமைகள் மேய்ந்து
புத்துருவான அடிப்படை எல்லையாகிறது.

*

இன்னுயிர்த் தமிழின் படற்கை,
தன்மை, முன்னிலையிலில்லை மாறுகை.
நெடில், குறிலாய்க் கூடித்தமிழ்
நெடுங்காலம் வாழுது பரவசமாய்.
பனை ஓலைச் சுவடியிலன்று
மின் கணனிச் சுவடியிலின்று.

*

எல்லா உலகையும் ஆளும் 
நல்ல மூவின மொழி
கசடதபற – வல்லினம்
ஙஞணநமன – மெல்லினம்.
யரலவழள – இடையினம்.
கல்லாதவர் பாவம் அறிவீனம்.

*

ஏழு கடலளவிலும் பெரிய 
ஆளுமை கொண்ட தமிழ்!
தொழுது கண்ணில் ஒற்றி
அழுது மண்ணில் விரலால் 
மழலையாக அன்று எழுதிய
தமிழெங்கள் உயிருக்கு நேர்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  30-3-2018

*

 

akaram

22.பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( இரவின் மடியில் . )

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்-5

 

kaviju-parathy-5

*

இரவின் மடியில் .

*
( புரவு- பாதுகாப்பு. விரவு- பரவுதல். முரவு- பறை வகை)

இரவின் மடியில் இன்மனம் உறங்கும்.
புரவுப் படியில் கனவுகள் மலரும்.
நிரவும் மலர்கள் நிறை மஞ்சமீது
சரணம் கொள்ளும் இதமான தூக்கம்.

*

பரவும் நாளின் பரபரப்பு நடுவிலும்;
திரவியம் மனிதனுக்கு திரளும் தூக்கம்.
சரளமான துயில் கொள்ள லென்பது
பரவும் அமைதியா பரமன் கொடையா!

*

அரவமான துயிலாமை இரவு. மடி
புரவியின் பாலைவனப் பயணம் சிலருக்கு.
அரற்றும் வெறுமை, இருண்மை, தனிமை
முரவு அடித்து முதுகு சொறியும்.

*

வரமேயொரு நிறை தூக்க இரவு.
விரற் சித்திர மன்மதக் கோயில்
சுரம் பாடும் சிறையும் நல்
இரவின் மடியில் உயிர் ஊன்றும்.

*

பொன்னிலவில் கடலலை தவழ வருடும்
தென்றல் அடமின்றி வசந்தம் இசைக்க
அன்றைய நிலவில் அசைந்த காதல்
இன்றுமினிப்பது இரவின் மடி அறியும்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.   26-3-2018

*

Scan-eye closed

21. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (மண்ணில் உலவும் விண்ணக தேவதைகள்)

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள்-4

*

kaviju-parathy-4

*

மண்ணில் உலவும் விண்ணக தேவதைகள்

*

பஞ்சுக் கன்னம் பிஞ்சு விரல்
அஞ்சும் விழி அமுத மொழி
கஞ்சமற்ற புன்முறுவல் கதுப்புக் கன்னம்
துஞ்சும் விநாடியும் இணை பிரியேன்.
வஞ்சி மகளென் வசீகர தேவதை
மஞ்சுப் பெண்ணெ என்னாசை மகளே

*

உயிராய் என்னை அன்று உருவாக்கினாள்
உயிர் எழுத்தும் உணர்வும் ஊட்டினாள்
உலகில் எங்கும் உருவாக முடியாதவள்
உள்ளே கருவிலெனை உண்டாக்கி உதிர்த்தவள்.
உகந்தவள், உயிரானவள் அப்பாவிற்கும் எனக்கும்.
உண்மையாய் என்னுயிர்த் தாய்த் தேவதையவள்.

*
மேனகை, ரம்பை, ஊர்வசி திலோத்தமையை 
மேவிய என் தோழி தமிழரசி
மேன்மையான உயிர்த் தமிழ்ப் பண்டிதை.
இன்தமிழில் என்னை மறக்கடிக்கும் ஒளவை.
இன்பமுடை பெரு வண்டு விழியாள்.
அன்பில் ஆழ்த்தும் இகலோகத் தேவதை

*

அரம்பையர்கள் அன்றும், இன்றும் என்றும்;
நிரம்பவே கண்களில் நிறைகிறார் பூவுலகிலும்.
தரமுடை கலையரசிகள் பத்மினி, சோபனா
வரம்பற்ற நடன தேவதைகளாய்ப் பலர்
சரமாக மொழியலாம் சுந்தரிகள் நாமத்தை
வரம் எமக்கு மண்ணிலுலாவும் தேவதைகள்.

*

23-3-2018    வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

angel

20. பாரதிதாசன் சான்றிதழ்கள், கவிதைகள் (உண்மை சொல்வாய் மனமே.)

 

கவியுலகப் பூஞ்சோலை குழும சான்றிதழ்கள் – 3

 

kaviju-parathy-3

*

உண்மை சொல்வாய் மனமே.

*

( அண்ணார் -பகைவர். வண்மை –வாய்மை. தெண்மை –அறிவின் தெளிவு. அண்ணல் -பெருமையுடையவர், இன்னும் பல)
கண்ணியமான வாழ்வெனில் அங்கு
உண்மையும் கலந்திருக்கும் நன்கு.
அண்ணார் கூட மதிப்பார்.
அண்ணல் என்றும் குறிப்பிடுவார்.
பண்ணும் இசைத்து ஏற்றிடுவார்.
*
வண்மை நிறைந்த வார்த்தைகள்
விண்ணைப் போன்ற வெண்மையது.
உண்மை நிலையால் வீழ்த்திட
விண்ணவரும் நளனைச் சோதித்தார்
மண்டியிட வில்லை நளமகாராசா.
*
தெண்மையுடன் பிறருக்குத் தீங்கற்ற
தண்மை வார்த்தைகள் கூறுதலே
உண்மை சொல்லல் உணர்வாய்!
மண்ணிலிதுவே மாணிக்கம்! மனக்
கிண்ணத்திலெடு! உயரத்தில் ஏறுவாய்!
*
நெஞ்சறிந்து பொய் சொன்னாலுன்
நெஞ்சே உன்னை வருத்தும்
அஞ்சாது உண்மை சொல்வாய்
வெஞ்சமரில் வென்றதாய் இன்புறுவாய்.
பஞ்சணையில் நிம்மதியாய்த் துஞ்சுவாய்.
*
பணம், புகழ், அகந்தையுன்
குணம் மாற்றி உண்மை
மணம் அழிக்கும் உணர்!
பிணமாக மதிப்பார் உண்மையற்றவனை
உண்மை நீராலுனைச் சுத்திகரி
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.18-3-2018.
*
swan devider